கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை

கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை

சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.
Published on

சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர், இரு ஆட்டங்களில் மொத்தமாக 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் கடைசி 5 ஆட்டங்களில் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும் போட்டியின் பாதியில் அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியை விட்டு வார்னர் விலகுகிறார் எனத் தகவல்கள் வெளியாகின. 2016-ல் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. 

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த வார்னர் கூறியதாவது:

என்னை அணியிலிருந்து நீக்கியதற்கான காரணம் எனக்குத் தெரியாது. அணி உரிமையாளர்கள், டிரெவர் பேலிஸ், லக்‌ஷ்மண், டாம் மூடி, முரளிதரன் ஆகியோர் இணைந்து ஒரு முடிவு எடுத்தால் அது ஒருமித்த கருத்தாக இருந்திருக்கும். ஆனால் யார் உங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள், யார் பேசவில்லை என்பது தெரியவில்லை. கடைசியில் நான் விளையாடவில்லை என்பதுதான் தெரிவிக்கப்பட்டது.

கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கான காரணத்தை என்னிடம் விளக்கவில்லை. இது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நன்றாக விளையாடாதது தான் காரணம் என்றால் இது சிக்கலானது. முன்பு எப்படி விளையாடினீர்கள் என்பது தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதற்கான ஒரு காரணமாக இருக்கும். மேலும் இந்த அணிக்காக நான் 100 (95) ஆட்டங்கள் விளையாடியுள்ளேன். நான்கு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. அதில் சென்னையில் நடைபெற்ற ஆட்டங்களில் இரண்டு ரன் அவுட்கள். இந்த நிலையை ஜீரணிப்பது கடினம். என் கேள்விக்கான விடை எனக்கு எப்போது கிடைக்காது என எண்ணுகிறேன். நான் தொடர்ந்து இயங்கவேண்டும். இன்னொரு ஏலம் வரப்போகிறது. சன்ரைசர்ஸ் அணிக்காக நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன். ஆனால் இதன் முடிவு அணியின் உரிமையாளர்களிடம் உள்ளது. ஆனால் வெளிப்படும் அறிகுறிகளைக் கொண்டு அணியில் என்னைத் தக்கவைத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. 2022 ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன். அணிக்குத் தலைமை தாங்கவும் நான் தயார் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com