சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்த கெய்க்வாட்: கடைசி கட்ட அதிரடியால் 156 ரன்கள் குவிப்பு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதி ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துபையில் தொடங்கின. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரில் டு பிளெஸ்ஸி ரன் ஏதும் எடுக்காமலும், இரண்டாவது ஓவரில் மொயீன் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னாவுக்கு முன்பு களமிறக்கப்பட்ட அம்பதி ராயுடுவும் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு காயம் காரணமாக வெளியேறினார். 

தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 4 ரன்களுக்கும், கேப்டன் தோனி 3 ரன்களுக்கும் ஆட்டமிழக்க சென்னை அணி பவர் பிளே முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து, கெய்க்வாட்டுடன் ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இந்த இணை பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தது. முதல் 11 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், கிருனால் பாண்டியா வீசிய 12-வது ஓவரில் கெய்க்வாட் ஒரு சிக்ஸர் பவுண்டரியும், ஜடேஜா ஒரு பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தன. 

இதன்பிறகு, ருதுராஜ் அதிரடிக்கு மாறினார். சென்னை ரன் ரேட்டும் படிப்படியாக அதிகரித்தது. மும்பை கேப்டன் கைரன் பொல்லார்ட் வீசிய 16-வது ஓவரில் கெய்க்வாட் 2 பவுண்டரிகளை விளாச 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய அடுத்த ஓவரில் கெய்க்வாட் சிக்ஸர் அடிக்க, ஜடேஜாவும் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.

ஜடேஜா 26 ரன்கள் எடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு கெய்க்வாட், ஜடேஜா இணை 81 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய டுவைன் பிராவோ சிக்ஸர்களிலேயே ரன் குவிக்கத் தொடங்கினார். ஆடம் மில்ன் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், டிரென்ட் போல்ட் வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார் பிராவோ. அதே ஓவரின் கடைசி பந்தில் கெய்க்வாட்டும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார்.

பூம்ரா வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் பிராவோ ஆட்டமிழந்தார். அவர் 8 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சென்னைப் பெரிய இன்னிங்ஸை ஆடினார்.

அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியும், கடைசி பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டும் இன்னிங்ஸைக் கச்சிதமாக முடித்தார் கெய்க்வாட்.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com