முதல் இரு இடங்களுக்குப் போட்டியிடும் சிஎஸ்கே, தில்லி, ஆர்சிபி: என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை தில்லி, பஞ்சாப் என இரு அணிகளிடமும் சிஎஸ்கே தோற்றுவிட்டால்...
முதல் இரு இடங்களுக்குப் போட்டியிடும் சிஎஸ்கே, தில்லி, ஆர்சிபி: என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன. இதனால் மட்டும் இந்த மூன்று அணிகளாலும் நிம்மதியாக இருக்க முடியாது. அடுத்ததாக முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்கப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல இரு வாய்ப்புகள் கிடைக்கும். இல்லாவிட்டால் பிளேஆஃப் சுற்றில் இரு வெற்றிகள் பெற்றால் தான் இறுதிச்சுற்றுக்குள் நுழைய முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டு விடும்.

முதல் இரு இடங்களுக்குப் போட்டியிடும் சிஎஸ்கே, தில்லி, ஆர்சிபி ஆகிய மூன்று அணிகளும் என்ன செய்தால் அவர்கள் விரும்பும் வாய்ப்பு கிடைக்கும்? பார்க்கலாம்.

சென்னை - 18 புள்ளிகள்

கடைசி இரு ஆட்டங்களில் தில்லி, பஞ்சாப் ஆகிய அணிகளுடன் மோதுகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் தில்லியைத் தோற்கடித்தாலே முதல் இரு இடங்களில் ஒன்று உறுதியாகிவிடும். சிஎஸ்கேவுக்கு இப்போதைய தேவை - 20 புள்ளிகள். 

ஒருவேளை தில்லியிடம் இன்று தோற்றுவிட்டால்? கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே பஞ்சாப்பை வென்று ஆர்சிபி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்றால் மூன்று அணிகளும் 20 புள்ளிகள் வைத்திருக்கும். அப்போது நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னைக்கு வாய்ப்பு கிடைக்கும். 

ஒருவேளை தில்லி, பஞ்சாப் என இரு அணிகளிடமும் சிஎஸ்கே தோற்றுவிட்டால்? அப்போது தில்லி அணி முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிடும். ஆர்சிபி அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெல்லக்கூடாது. அப்போது சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

தில்லி - 18 புள்ளிகள்

சென்னை போல தில்லிக்கு நல்ல நெட் ரன்ரேட் கிடையாது. எனினும் பெங்களூரை விட நல்ல நெட் ரன்ரேட் என்பதால் ஓரளவு நல்ல நிலைமையில் உள்ளது. எனவே தில்லிக்கும் 20 புள்ளிகள் இருந்தால் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிடலாம். ஏற்கெனவே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சென்னை, ஆர்சிபி அணிகளுக்கு எதிராகத் தனது கடைசி இரு ஆட்டங்களை தில்லி விளையாடுகிறது. இதில் ஒரு வெற்றி கிடைத்தாலே போதும். 

ஆர்சிபி - 16 புள்ளிகள்

மற்ற இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களில் ஒன்று கிடைத்துவிடும். ஆர்சிபி 16 புள்ளிகளை வைத்திருப்பதால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். இரு வெற்றிகளைப் பெற்றாலும் கூட ஆர்சிபிக்கு வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் சிஎஸ்கே, தில்லி அணிகளும் 20 புள்ளிகளைப் பெற்றுவிட்டால் நெட் ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் கிடைக்காமல் போகலாம். அதனால் மீதமுள்ள இரு ஆட்டங்களை வென்று சிஎஸ்கே அல்லது தில்லி ஆகிய அணிகளில் ஒன்று மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் தோற்கவேண்டும். அப்போது ஆர்சிபிக்கு முதல் இரு இடங்களில் ஒன்று கிடைக்கும். சென்னை அணி தில்லியைத் தோற்கடித்தால் பிறகு கடைசி லீக் ஆட்டத்தில் தில்லியைத் தோற்கடித்து நினைத்ததைச் சாதிக்கலாம் கோலி அணி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com