எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் அந்த தோனி எங்கே?

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்குப் பாரமாக இருந்துள்ளது தோனியின் பேட்டிங்.
எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் அந்த தோனி எங்கே?
Published on
Updated on
2 min read

என்ன ஆச்சு தோனிக்கு என்று வியப்பதா அல்லது தோனி இனிமேல் இப்படித்தான் விளையாடுவார் என மனத்தைத் தேற்றிக்கொள்வதா எனத் தெரியவில்லை.

தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைய தோனியின் நிதானமான ஆட்டம் முக்கியக் காரணமாகிவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் 18 ரன்கள் எடுக்க அதிகப் பந்துகளை முதல்முறையாக எதிர்கொண்டுள்ளார் தோனி.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ராயுடு 55 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியும் அடிக்காமல் 18 ரன்கள் எடுத்தார் தோனி. இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

தோனியின் நிதானமான, தடுமாற்றமான பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தோனிக்குப் பதிலாக ஜடேஜா முன்பே களமிறங்கியிருந்தால் சிஎஸ்கே அணி இன்னும் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வாய்ப்புண்டு எனப் பலரும் கருதுகிறார்கள். 

ஐபிஎல் 2021 போட்டியில் 13 ஆட்டங்களில் 84 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. ஸ்டிரைக் ரேட் - 97.67. 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

2008 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார் தோனி. 2017 மற்றும் 2020 ஆண்டுகளில் 120-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார். மற்ற ஆண்டுகளில் எல்லாம் அதிரடி ஆட்டத்தால் நல்ல ஸ்டிரைக் ரேட் அவரிடம் இருந்தது. எந்த ஐபிஎல் போட்டியிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் 100-க்கும் குறைவாக இருந்ததில்லை. இந்தமுறை தான் 97.67 என அபாயக்கட்டத்தில் உள்ளது. 

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தை விடவும் நிதானமான, தடுமாற்றமான ஓர் ஆட்டத்தை தோனி விளையாடியதில்லை.

18 அல்லது அதற்கு அதிகமான ரன்களை எடுக்க தோனி அதிகப் பந்துகளை எதிர்கொண்டது இப்போதுதான். அதாவது இவ்வளவு குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் 18 அல்லது அதற்கு அதிகமான ரன்களை இதற்கு முன்பு தோனி எடுத்ததில்லை.

2008-ல் சென்னையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 31 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே தோனி எடுத்தார். அந்த ஆட்டத்தின் ஸ்டிரைக் ரேட் - 74.19. அதில் கூட இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். 

தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இன்னும் குறைந்த ஸ்டிரைக் ரேட். 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டும். இதன் ஸ்டிரைக் ரேட் - 66.67. ஒரு பவுண்டரியும் இல்லை.

2009-ல் தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது ஆர்சிபிக்கு எதிராக 30 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் எடுத்தார் தோனி. அதில் ஒரு பவுண்டரியும் இல்லை. அதற்குப் பிறகு இப்போதுதான் 25 பந்துகளை எதிர்கொண்டும் அவரால் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்குப் பாரமாக இருந்துள்ளது தோனியின் பேட்டிங். எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் அந்த தோனி எங்கே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.