பிளேஆஃப் வாய்ப்பு கிடைக்குமா?: மும்பை தலை மேல் கத்தி!

இரு அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?
மும்பை அணி (கோப்புப் படம்)
மும்பை அணி (கோப்புப் படம்)

ஐபிஎல் போட்டியை 5 முறை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்தமுறை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

ஐபிஎல் 2021 போட்டியில் 12 ஆட்டங்களில் 5 வெற்றிகளை மட்டும் பெற்று 10 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. 

மும்பைக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என யாருமே எண்ணிப் பார்த்திருக்க முடியாது.

இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது மும்பை.

தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோற்ற பிறகும் சென்னைக்கு எதிராக 190 ரன்கள் என்கிற இலக்கை விரட்டி 17.3 ஓவர்களில் வெற்றியைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அணி. இதனால் திடீரென அனைவரையும் அச்சுறுத்தும் அணியாக மாறிவிட்டது. ராஜஸ்தான் அணியும் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் தான் உள்ளது. இதனால் மும்பை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாகப் போராடும்.

இரு அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

ராஜஸ்தான் - 10 புள்ளிகள்

முதலில் மீதமுள்ள இரு ஆட்டங்களையும் ராஜஸ்தான் வெல்லவேண்டும். கடைசி இரு ஆட்டங்களிலும் மும்பை, கொல்கத்தா அணிகளுடன் ராஜஸ்தான் மோதுகிறது. இருவரையும் தோற்கடித்தால் அவர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டும் கிடைத்து, 12 புள்ளிகள் இருந்தால் நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.

இன்று மும்பையை ராஜஸ்தான் தோற்கடித்தால் 12 புள்ளிகளுடன் கொல்கத்தாவுடன் இணைந்துவிடும். பிறகு வியாழன் அன்று நடைபெறும் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆட்டத்தில் வெல்லும் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். 

மும்பை - 10 புள்ளிகள்

ராஜஸ்தான் நிலைமை தான் மும்பைக்கும். நெட் ரன்ரேட் மோசமாக உள்ளது. மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் முதலில் வெல்லவேண்டும். அப்போதும் கூட பிளேஆஃப் வாய்ப்பு உறுதியில்லை. ராஜஸ்தானை கொல்கத்தா வீழ்த்திவிட்டால் நெட் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். ஆனால், மும்பை மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்று கொல்கத்தா ராஜஸ்தானிடம் தோற்றால் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்கு மும்பை தகுதி பெற்றுவிடும். விளையாட்டில் சில சமயம் அதிசயங்கள் நடக்கும். அப்படி ஏற்பட்டால் மும்பை பிளேஆஃப்புக்குச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com