பும்ராவைப் பயன்படுத்தத் தவறினாரா பொல்லார்ட்? தோல்விக்குக் காரணம் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ்பிரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொல்லார்ட் சரியான நேரத்தில் பயன்படுத்தத் தவறியதும் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஒரு பார்வை எழுந்துள்ளது.
பும்ராவைப் பயன்படுத்தத் தவறினாரா பொல்லார்ட்? தோல்விக்குக் காரணம் என்ன?


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ்பிரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் சரியான நேரத்தில் பயன்படுத்தத் தவறியதும் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஒரு பார்வை எழுந்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. மும்பை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டதால், பொல்லார்ட் கேப்டனாகச் செயல்பட்டார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளே முடிவதற்குள் 4 மூத்த வீரர்களை இழந்து தத்தளித்தது. இதில் அம்பதி ராயுடுவும் காயம் காரணமாக வெளியேறினார். இப்படிப்பட்ட நிலையிலிருந்த சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது.

மும்பையால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 20 ரன்களில் தோல்வியடைந்தது.

ஒரு ஆட்டம் முடிந்தவுடன் இதைச் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம், இதைச் செய்யத் தவறியதன் விளைவே தோல்விக்குக் காரணம் என்பது போன்ற யோசனைகள் எழுவது இயல்பானது. இது கேப்டன்களுக்கு பெரும் நெருக்கடிகளைத் தரும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் இல்லாமல் பொல்லார்ட் கேப்டனாகச் செயல்பட்டது இதுபோன்ற பல்வேறு விமர்சனங்களை அவருக்குப் பெற்றுத் தரும்.

யோசனை, விமர்சனம் என்பதைத் தாண்டி நேற்றைய ஆட்டத்தைத் திரும்பிப் பார்க்கையில் மும்பையின் முதன்மைப் பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ராவை சரியான தருணங்களில் பயன்படுத்தத் தவறினாரா பொல்லார்ட் என்ற பார்வை எழுகிறது.

பொதுவாக பும்ராவை பவர் பிளேவில் ஒரு முறை, நடு ஓவர்களில் ஒரு முறை, கடைசி கட்டங்களில் இரண்டு முறை பயன்படுத்துவது ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பாணியாக இருந்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் சீசன் முதல் பகுதி ஆட்டங்களில்கூட பும்ரா அவ்வாறுதான் பயன்படுத்தப்பட்டுள்ளார். அது மும்பைக்குப் பயனும் அளித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டம்: 

இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஓவருக்குப் பிறகு பும்ராவை ரோஹித் சர்மா பயன்படுத்தவில்லை. இதன்பிறகு, கிளென் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் பாட்னர்ஷிப் அமைக்கத் தொடங்கியதால், விக்கெட்டின் தேவையை உணர்ந்த ரோஹித் சர்மா, 13-வது ஓவர் வீச பும்ராவை அழைத்தார். இதற்குப் பலன் கோலி ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்லுடனான அவரது முக்கியமான பாட்னர்ஷிப் பிரிந்தது. கோலி விக்கெட் விழுந்ததால், அடுத்தடுத்த ஓவர்களிலும் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.

ஏபி டி வில்லியர்ஸின் கடைசி நேர அதிரடியால் பெங்களூரு வெற்றி பெற்றாலும், பும்ராவை 13-வது ஓவர் வீச அழைத்தது ஆட்டத்தின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.   

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்திலும் இதே பாணியைக் கடைப்பிடித்தார் ரோஹித் சர்மா. பவர் பிளேவுக்குப் பிறகு மீண்டும் 12-வது ஓவரில் பயன்படுத்தப்பட்டார். அதில் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

டெல்லி கேபிடல்ஸனுக்கு எதிரான ஆட்டத்திலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆட்டம்:

இதிலும் 2-வது ஓவருக்குப் பிறகு பும்ராவைத் தொடர்ச்சியாக பந்துவீச அழைக்கவில்லை ரோஹித். எனினும், பேர்ஸ்டோவ் மும்பை பந்துவீச்சாளர்களைப் பந்தாடியதால் 6-வது ஓவரை வீச பும்ராவை அழைக்க வேண்டிய நிர்பந்தம்  ரோஹித்துக்கு ஏற்பட்டது. அதற்குப் பலனாக 10 ரன்களுக்கு மேல் சென்றுகொண்டிருந்த ஓவர்களுக்கு மத்தியில் 2 ரன்களை மட்டுமே கொடுத்து வேகத் தடையாக இருந்தார் பும்ரா.

இதன்பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து பெரிதளவில் பாட்னர்ஷிப் அமையாத காரணத்தினாலும், ஏற்கெனவே 2 ஓவர்கள் வீசியதனாலும் அவரை நடு ஓவர்களில் பந்துவீச ரோஹித் அழைக்கவில்லை. கடைசி கட்டங்களில்தான் பயன்படுத்தப்பட்டார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்திலும் இதேபோல பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் மற்றும் கடைசி கட்டத்தில் இரண்டு ஓவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டார் பும்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸுடன் முதல் பகுதியில் நடைபெற்ற லீக் ஆட்டம்:

இந்த ஆட்டத்தில் 5-வது ஓவருக்குப் பிறகு பும்ரா பயன்படுத்தப்படவில்லை. எனினும், பாப் டு பிளெஸ்ஸி மற்றும் மொயீன் அலி சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து வந்ததால், இதைப் பிரிக்க 10-வது ஓவரிலேயே பயன்படுத்தப்பட்டார் பும்ரா. அந்த ஓவரில் 17 ரன்களைக் கொடுத்தாலும் அவர் மொயீன் அலி (58 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், அடுத்த ஓவரிலேயே டு பிளெஸ்ஸி மற்றும் சுரேஷ் ரெய்னாவும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் ராயுடு அதிரடி காட்டினாலும், பும்ராவின் மொயீன் அலி விக்கெட் திருப்புமுனையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

முதல் பகுதி ஐபிஎல் ஆட்டங்களில் பும்ரா பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்தோம். மும்பைக்கு அது அளித்த பலனையும் பார்த்தோம்.

இரண்டாம் பகுதியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பார்ப்போம்.

நேற்றைய ஆட்டமும் பும்ராவும்:

பவர் பிளேவில் 4 விக்கெட்டுகளையும், ராயுடு காயம் காரணமாக வெளியேறிய நிலையிலும் 7-வது ஓவரை வீச பும்ராவை அழைத்தார் கேப்டன் பொல்லார்ட். பும்ராவுக்கு இதுதான் முதல் ஓவர். முக்கியமான விக்கெட்டுகள் விழுந்ததால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பாட்னர்ஷிப் அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பும்ரா வீசிய 7-வது ஓவருக்குப் பிறகு, 8-வது ஓவரை கேப்டன் பொல்லார்ட் வீசினார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சற்று சாதகமாக இருந்ததால், பாட்னர்ஷிப் அமைவதற்குள் விக்கெட்டுகளை வீழ்த்த 9-வது ஓவரையும் பும்ராவை வீச அழைத்திருக்கலாம். ஆனால், 9-வது ஓவரில் சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்துகிறார் பொல்லார்ட்.

9-வது ஓவரிலிருந்து 13-வது ஓவர் வரை தொடர்ச்சியாக 5 ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இந்த இடத்தில்தான் பொல்லார்ட் நடுவில் ஒரு ஓவரில் பும்ராவைப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிற பார்வை எழுகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ருதுராஜ், ரன் வேகத்தைத் துரிதப்படுத்தத் தொடங்கினார். கிருனாள் பாண்டியா வீசிய 12-வது ஓவரில் ருதுராஜ் 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச, ஜடேஜாவும் 1 பவுண்டரி விளாச சென்னைக்கு 18 ரன்கள் கிடைத்தன. அதுவரை அடக்கி வாசித்து வந்த சென்னை அதிரடிக்கு மாறத் தொடங்கியது.

ரன்களைத் தாண்டி பேட்ஸ்மேனுக்கும் நேர்மறையான எண்ண ஓட்டத்தை இந்த ஓவர் அளித்திருக்கும். இதற்குப் பிறகும், 13-வது ஓவரில் ருதுராஜ் - ஜடேஜா பாட்னர்ஷிப்பைப் பிரிக்க பும்ராவை அழைக்கத் தவறினார் பொல்லார்ட். ராகுல் சஹார் வீசிய 13-வது ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே ருதுராஜ் அடித்தாலும், ருதுராஜின் ஆட்டத்தில் நேர்மறைத் தன்மை வெளிப்பட்டது. இதுவே பின் வந்த அதிரடிக்கு வழிவகுத்தது.

இதன்பிறகு, 14-வது ஓவர் மற்றும் 17-வது ஓவரில் பும்ரா பயன்படுத்தப்பட்டார். 17-வது ஓவரில் முக்கியமான ஜடேஜா விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், 19-வது ஓவரையும் அவர் வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 19-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். விளைவு அந்த ஓவரில் டுவைன் பிராவோ 2 சிக்ஸர்கள், ருதுராஜ் 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச சென்னைக்கு 24 ரன்கள் கிடைத்தன. 20-வது ஓவரை வீசிய பும்ரா 2-வது பந்திலேயே பிராவோ விக்கெட்டை வீழ்த்தினார்.

இதற்கு முந்தைய ஆட்டங்களில்கூட கடைசி கட்டங்களில் 17 மற்றும் 19-வது ஓவர்களை வீசுவதுதான் பும்ராவின் பணியாக இருந்துள்ளது.

14-வது ஓவருக்குப் பதில் 11, 12, அல்லது 13-வது ஓவரில் பும்ராவைப் பயன்படுத்தியிருந்தால் விளைவுகள் மாறியிருக்கலாம். அல்லது 20-வது ஓவருக்குப் பதில் 19-வது ஓவரில் பும்ராவைப் பயன்படுத்தியிருந்தால், 10 ரன்களுக்குக் குறைவாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம். இந்த நேரங்களில் பும்ரா பயன்படுத்தப்பட்டிருந்தால், விளைவுகள் நிச்சயம் இதைவிட மோசமாக இருந்திருக்காது, மாறாக மும்பைக்கே நிச்சயம் பலனளித்திருக்கும் என்பதற்கான சாட்சிகள்தான் முதல் பகுதி ஆட்டங்களில் பும்ரா பயன்படுத்தப்பட்ட உதாரணங்கள்.

நேற்றைய ஆட்டத்தில் பொல்லார்ட் எடுத்த ஒவ்வொரு முடிவுக்குப் பின்னும் நியாயமான காரணங்கள் இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை வென்றிருந்தால், இந்த கேள்விகள் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை.

எனினும், வெற்றி பார்முலாவில் இருந்து விலகும்போது, அது தோல்வியில் முடியும்போது இதுபோன்ற பார்வைகள் எழுவது தவிர்க்க முடியாதது. தோல்விக்கான காரணத்தை பொல்லார்டும் அணி நிர்வாகமும் ஆராய்ந்தால், நிச்சயம் இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com