கணக்குகள் ஆரம்பம்: சன்ரைசஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

மற்ற அணிகள் சன்ரைசர்ஸுக்கு ஏற்றாற்போல வெற்றியும் தோல்விகளும் பெறவேண்டும்...
சன்ரைசர்ஸ் அணி
சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற நூலிழையில் அதற்கு வாய்ப்புள்ளதாகக் கருத முடியும்.

சன்ரைசர்ஸ் அணி 10 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே கொண்டு கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியால் கடகடவென மேலேறி 4-ம் இடத்தை அடைந்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியுமா?

அதற்கு முதலில் அந்த அணி மீதமுள்ள 4 ஆட்டங்களை வென்றாகவேண்டும். அதன்பிறகு மற்ற அணிகள் சன்ரைசர்ஸுக்கு ஏற்றாற்போல வெற்றியும் தோல்விகளும் பெறவேண்டும்.

அந்தக் கணக்கைத்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் மட்டும் பெற்ற எந்த அணியாவது பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளதா?

ஆம்.

2019 ஐபிஎல் போட்டியில் மட்டும் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் இதே சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. அந்த வருடம் மும்பை, சென்னை, தில்லி ஆகிய அணிகள் தலா 18 புள்ளிகள் பெற்றதால் இதர அணிகளால் அதிகப் புள்ளிகளைப் பெற முடியாமல் போனது. சன்ரைசர்ஸ், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றதில் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. (ஆனால் சில ஐபிஎல் போட்டிகளில் 14 புள்ளிகள், 7 வெற்றிகள் பெற்றும் சில அணிகளால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாமல் போயிருக்கிறது.)  

சரி, நெட் ரன்ரேட் உதவியில்லாமல் சன்ரைசர்ஸ் அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியுமா?

முடியும்.

என்னது முடியுமா என ஆச்சர்யப்படுகிறீர்களா? மற்ற அணிகள் மனது வைத்தால் முடியும். 

சன்ரைசர்ஸ் அணி மீதமுள்ள நான்கு ஆட்டங்களையும் வெல்ல வேண்டும். அடுத்ததாக, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய நான்கு அணிகளும் இனிவரும் 4 ஆட்டங்களிலும் தலா 1 வெற்றி மட்டுமே பெற வேண்டும். இப்படி நடந்தால் சென்னை, தில்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். நிஜமாகவே இது நடந்துவிட்டால் சன்ரைசர்ஸ் ரசிகர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

சரி, அது நடக்க வாய்ப்பில்லை என வைத்துக்கொள்வோம். நெட் ரன்ரேட் உதவியுடன் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவது எப்படி?

சிஎஸ்கே, தில்லி தவிர மற்ற எல்லா அணிகளும் 12 புள்ளிகள் மட்டுமே பெறவேண்டும். அப்போது பிளேஆஃப்புக்கு நெட் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் முன்னேறலாம். இதெல்லாம் அப்படியே நடந்தால் அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.

ஆர்சிபி (தற்போது 12 புள்ளிகள்) - இந்த அணி மீதமுள்ள எல்லா ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், பஞ்சாப், சன்ரைசர்ஸ், தில்லி) தோற்கவேண்டும் - 12 புள்ளிகள்
கேகேஆர் (8) - தில்லி, பஞ்சாப்பை வென்று சன்ரைசர்ஸ், ராஜஸ்தானிடம் தோற்கவேண்டும் - 12 புள்ளிகள்
பஞ்சாப் (8) - மும்பை, கொல்கத்தாவிடம் தோற்கவேண்டும். ஆர்சிபி, சிஎஸ்கேவை வென்றாக வேண்டும் - 12 புள்ளிகள்
ராஜஸ்தான் (8) - ஆர்சிபி, கேகேஆரை வென்று சிஎஸ்கே, மும்பையிடம் தோற்கவேண்டும் - 12 புள்ளிகள்
மும்பை (8) - பஞ்சாப், ராஜஸ்தானை வெல்ல வேண்டும். தில்லி, சன்ரைசர்ஸிடம் தோற்க வேண்டும் - 12 புள்ளிகள்
சன்ரைசர்ஸ் - (4) - சிஎஸ்கே, கொல்கத்தா, ஆர்சிபி, மும்பை அணிகளை வெல்ல வேண்டும் - 12 புள்ளிகள்

ஐபிஎல் போட்டியில் பல அதிசயங்கள் நடந்துள்ளன. பல அணிகள் கடைசிக்கட்டத்தில் நன்றாக விளையாடி திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளன. அந்த அனுபவத்தை சன்ரைசர்ஸ் அணி தர வாய்ப்புள்ளதா?

செப்டம்பர் 27 வரையிலான புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 10 8 2 16 +1.069
 2. தில்லி 10 8 2 16 +0.711
 3. பெங்களூர் 10 6 4 12 -0.359
 4. கொல்கத்தா 10 4 6 8 +0.322
 5. பஞ்சாப் 10 4 6 8 -0.271
 6. ராஜஸ்தான் 10 4 6 8 -0.369
 7. மும்பை 10 4 6 8 -0.551
 8. ஹைதராபாத்  10 2 8 4 -0.501

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com