ஆட்டமிழக்காமலேயே அஸ்வின் வெளியேறியது சரியா?: ஐபிஎல்-லில் புதிய சர்ச்சை

ஐபிஎல் போட்டியிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக...
அஸ்வின், ஹெட்மையர்
அஸ்வின், ஹெட்மையர்

கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஆட்டமிழந்தால் மட்டுமே களத்தை விட்டு வெளியேறுவார். அல்லது காயமடைந்தால் ஆட்டத்தைத் தொடராமல் விலகுவார். 

ஐபிஎல் போட்டியிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின்.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னெளவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய லக்னெள அணி, 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 

இந்த ஆட்டத்தில் ஒரு விநோதமான சம்பவம் ஏற்பட்டது. ராஜஸ்தான் இன்னிங்ஸின்போது 6-ம் நிலை வீரராக 10-வது ஓவரின் கடைசியில் களமிறங்கினார் அஸ்வின். ரியான் பராக் இருக்கும்போது அஸ்வின் அவருக்கு முன்பு களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட அஸ்வின், 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு திடீரென 19-வது ஓவரில் 2 பந்துகளுக்குப் பிறகு பிறகு ஆட்டத்தை விட்டு திடீரென வெளியேறினார். அப்போது அவர் ஆட்டமிழக்கவும் இல்லை, காயம் எதுவும் ஏற்படவும் இல்லை. ரிடையர்ட் ஹர்ட் முறையில் அஸ்வின் வெளியேறியதாகக் கணக்கில் கொள்ளப்பட்டது. கடைசி ஓவரில் ரியான் பராக் அடித்தாட ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அஸ்வினுக்குப் பிறகு களமிறங்கிய ரியான் பராக், ஒரு சிக்ஸர் அடித்து 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

அஸ்வினின் இந்தச் செயல் கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் ரன் எடுக்கத் தடுமாறும் ஒரு வீரர், ஆட்டமிழக்காமல், காயம் ஏற்படாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறலாமா?

வெளியேறலாம் என்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அணியினர் சேர்ந்து எடுத்த முடிவு என கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டியளித்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் முதல்முதலாக ஆட்டமிழந்தவர் அஸ்வின். இதனால் இனி வரும் ஆட்டங்களில் இதைப் பல அணிகள் பின்பற்றும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்றாக இந்த நடைமுறை இனி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் இதற்குச் சில எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தவறான நடைமுறை. நியாயமாகவும் இல்லை. ரன் அடிக்கத் தெரியாத வீரர், சவாலை எதிர்கொள்ளாமல் வெளியேறுவது தவறான முன்னுதாரணம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதேபோல ஒரு பந்துவீச்சாளர் அதிக ரன்களைக் கொடுத்தால் அவரும் இதுபோல பாதி ஓவரில் வெளியேறலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com