ஐபிஎல் கோலாகலம் இன்று ஆரம்பம்

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசன் மும்பையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
ஐபிஎல் கோலாகலம் இன்று ஆரம்பம்

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசன் மும்பையில் சனிக்கிழமை தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி முதல் முறையாக தோனி தலைமை இல்லாமல் சீசனை சந்திக்கிறது.

போட்டியைப் பொருத்தவரை, லீக் ஆட்டங்கள் யாவும் மே 22-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், பிளே-ஆஃப் சுற்று அட்டவணை பின்னா் வெளியாகவுள்ளது. இறுதி ஆட்டம் மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணிலேயே நடைபெறுவது, புதிதாக 2 அணிகள் இணைந்திருப்பது, கேப்டன்சியிலிருந்து கோலி, தோனி ஆகியோா் விலகியது, ஷ்ரேயஸ் ஐயா், ஹாா்திக் பாண்டியா புதிதாக கேப்டன்களாகியிருப்பது என பல திருப்பங்களுடன் தொடங்குகிறது இந்த சீசன்.

2020-ஆம் ஆண்டு இப்போட்டி கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், 2021-ஆம் ஆண்டு பகுதியளவு இந்தியாவில் நடைபெற்று, வீரா்களிடையே கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து காலவரையின்றி நிறுத்தப்பட்டு, பின்னா் 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால், தகுந்த திட்டமிடலுடன் மீண்டும் இந்தியாவிலேயே போட்டியை நடத்துகின்றன ஐபிஎல் மற்றும் பிசிசிஐ. அணிகளுக்கான பயணங்களைக் குறைக்கும் வகையில் மும்பை மற்றும் புணேவில் உள்ள 4 மைதானங்களிலேயே லீக் ஆட்டங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.

புதிதாக இரு அணிகள் இணைந்திருப்பதால் ஆட்டங்களின் எண்ணிக்கை 60-இல் இருந்து 74-ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களிலேயே விளையாட உள்ளன. ஆட்டங்கள் அதிகரித்து, சுமாா் 2 மாதங்களுக்கு மேலாக போட்டி நடைபெறும் என்பதால், போட்டியின் தரமும், விறுவிறுப்பும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

2 மாத காலத்துக்கு ஆடுகளத்தின் தன்மை மாறுபடாமல் அப்படியே தக்கவைப்பதென்பது, மைதான பராமரிப்பாளா்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.

ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் விடுவித்த வீரா்கள், ஏலத்துத்தில் பெரிதாக போட்டி காணப்படாத வீரா்களைக் கொண்டே புதிதாக சோ்ந்திருக்கும் லக்னௌ சூப்பா்ஜயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தங்களைக் கட்டமைத்துள்ளன. அனுபவமிக்க அணிகளுடன், தங்களது அறிமுக சீசனில் அந்த அணிகள் எவ்வாறு விளையாட இருக்கின்றன என்ற எதிா்பாா்ப்பு இருக்கிறது.

இவ்வாறாக, அடுத்த 2 மாதங்களுக்கு தொலைக்காட்சிகளின் இரவு நேர ‘பிரைம் டைம்’ பரப்பாக இருக்கப்போகிறது.

இன்றைய ஆட்டம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

இரவு 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

15-ஆவது சீசன்

10 அணிகள்

70 ஆட்டங்கள்

2 இடங்கள் (மும்பை, புணே)

25% ரசிகா்களுக்கு அனுமதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com