உம்ரான் மாலிக் பந்துவீச்சைத் துவம்சம் செய்த ருதுராஜ்

உம்ரான் மாலிக் வீசிய 24 பந்துகளில் 13 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.
உம்ரான் மாலிக் பந்துவீச்சைத் துவம்சம் செய்த ருதுராஜ்

ஐபிஎல் 2022 போட்டியின் அடையாளம் என பிசிசிஐ தலைவர் கங்குலியால் பாராட்டுகளைப் பெற்று புதிய ஐபிஎல் நட்சத்திரமாக உள்ளார் சன்ரைசர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்.

ஏப்ரல் 27 அன்று குஜராத் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 8 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகள் என அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றைப் பிடித்தார். 

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் உம்ரான் மாலிக் எப்படி அசத்தப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள்.

நேற்றைய ஆட்டத்தில் மணிக்கு 154 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் ஒரு நல்ல அனுபவமாக உம்ரான் மாலிக்குக்கு அமையவில்லை. 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்தார். அவருடைய ஓவர்களில் 6 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்தார்கள் சிஎஸ்கே வீரர்கள். சன்ரைசர்ஸ் அணியின் பெரிய பலமாக இருந்த உம்ரான் மாலிக்கைத் துவம்சம் செய்ததால் சிஎஸ்கேவால் 200 ரன்களை எடுக்க முடிந்தது. 

ஆரம்பத்திலிருந்தே உம்ரான் மாலிக்கின் பந்துகளை அதிரடியாக விளையாடினார் ருதுராஜ் கெயிக்வாட். கிரீஸை விட்டு முன்னேறி துணிச்சலுடன் அவருடைய பந்துகளை எதிர்கொண்டார். அதிரடி மனநிலையுடன் ஆடியதால் அது பெரிய பலனைத் தந்தது. 

உம்ரான் மாலிக் வீசிய 24 பந்துகளில் 13 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இத்தனைக்கும் மற்ற நாள்களை விடவும் நேற்று அதிவேகமாகப் பந்துவீசினார் உம்ரான் மாலிக். ஆனால் ஒரு பெரிய அச்சுறுத்தலை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் ருதுராஜ். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 99 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

ருதுராஜ் vs உம்ரான் மாலிக்: 33 ரன்கள்*(13 பந்துகள்)

2,0,4,6,0,1,4,4,1,1,4,6,0.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com