அணி வீரர்களிடையே உள்ள ஒற்றுமை காரணமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக குஜராத் அணி கேப்டன் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப் சுற்று தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த குஜராத்தும் ராஜஸ்தானும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜாஸ் பட்லர் 89 ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த குஜராத் அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவர்களில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்தார் மில்லர். பாண்டியா 40, மில்லர் 68 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதையடுத்து குஜராத் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
பரிசளிப்பு நிகழ்வில் குஜராத் கேப்டன் பாண்டியா கூறியதாவது:
அணியில் உள்ள 23 வீரர்களும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள். வெவ்வேறு திறமைகளுடன் உள்ளார்கள். நல்ல மனிதர்கள் நம்மிடையே இருந்தால் நம்மால் நிறைய சாதிக்க முடியும் என மில்லரிடம் கூறினேன். எங்கள் அணியில் உள்ள நல்ல வீரர்களால் எங்களால் வெற்றிகளைப் பெற முடிந்தது. 11 பேருக்கு வெளியே உள்ள வீரர்களும் அனைவரும் நன்றாக விளையாட வேண்டும் என விரும்புகிறார்கள். வேண்டிக்கொள்கிறார்கள். இதனால்தான் நாங்கள் இவ்வளவு தூரம் வந்துள்ளோம். விளையாட்டுக்கு மரியாதை அளிப்பது முக்கியம் என்றார்.