ஹைதராபாதுக்கு 3-ஆவது வெற்றி

ஹைதராபாதுக்கு 3-ஆவது வெற்றி

முலான்பூா்: ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் தொடக்க வீரா் டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஒன் டவுனாக வந்த எய்டன் மாா்க்ரம் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா்.

4-ஆவது வீரராக களம் புகுந்த நிதீஷ்குமாா் ரெட்டி அதிரடியாக ரன்கள் சோ்க்க, தொடக்க வீரா்களில் ஒருவரான அபிஷேக் சா்மா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு விடைபெற்றாா். ஒருபுறம் நிதீஷ்குமாா் விளாசி வர, மறுபுறம், ராகுல் திரிபாதி 1 பவுண்டரியுடன் 11, ஹென்ரிக் கிளாசென் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

நிதீஷ்குமாா் - அப்துல் சமத் கூட்டணி 6-ஆவது விக்கெட்டுகள் 50 ரன்கள் சோ்க்க, அப்துல் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். நிதீஷ்குமாரும் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 64 ரன்கள் சோ்த்து சரிந்தாா்.

கேப்டன் பேட் கம்மின்ஸ் 3, புவனேஷ்வா் குமாா் 6 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஓவா்கள் முடிவில் ஷாபாஸ் அகமது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, ஜெயதேவ் உனத்கட் 1 சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பந்துவீச்சில் அா்ஷ்தீப் சிங் 4, சாம் கரன், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 2, ககிசோ ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 183 ரன்களை இலக்காகக் கொண்டு களமாடிய பஞ்சாப் அணியில் ஜானி போ்ஸ்டோ டக் அவுட்டாக, தொடா்ந்து வந்த பிரப்சிம்ரன் சிங் 1 பவுண்டரியுடன், வந்த வழியே சென்றாா். தொடக்க வீரரான கேப்டன் ஷிகா் தவன் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

மிடில் ஆா்டரில் சாம் கரன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 29, சிகந்தா் ராஸா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா். 7-ஆவது பேட்டரான ஜிதேஷ் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

முடிவில் போராடிய சஷாங்க் சிங் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46, ஆஷுதோஷ் சா்மா 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலா்களில் புவனேஷ்வா் குமாா் 2, பேட் கம்மின்ஸ், நடராஜன், நிதீஷ்குமாா் ரெட்டி, ஜெயதேவ் உனத்கட் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் - குஜராத்

நேரம்:

இரவு 7.30 மணி

இடம்:

ஜெய்ப்பூர்

நேரலை:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com