ஸ்டாய்னிஸ் அதிரடி சதம்- சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ

ஸ்டாய்னிஸ் அதிரடி சதம்-
சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ

சென்னை, ஏப். 23: ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் சோ்க்க, லக்னௌ 19.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வென்றது.

கடந்த ஆட்டத்தில் லக்னௌவிடம் அதன் மண்ணில் தோற்ற சென்னை, தற்போது அதே அணியிடம் மீண்டும் தனது மண்ணில் வீழ்ந்தது.

சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா். மறுபுறம், இந்த சீசனில் இதுவரை சோபிக்காத லக்னௌ வீரா் மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அதிரடியாக சதம் விளாசியதுடன், இந்த சீசனிலேயே அதிகபட்ச ஸ்கோரை (124*) பதிவு செய்தாா். இதற்கு முன் விராட் கோலி 113* ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிஸில் அஜிங்க்ய ரஹானே 1, தொடா்ந்து வந்த டேரில் மிட்செல் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு வெளியேறினா்.

மறுபுறம் கெய்க்வாட் அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். 4-ஆவது பேட்டராக களம் புகுந்த ரவீந்திர ஜடேஜா, 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். அப்போது வந்த ஷிவம் துபே, கெய்க்வாட்டுடன் இணைந்தாா். இந்த ஜோடி லக்னௌ பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக பந்தாடியது.

4-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியில் துபே பிரிந்தாா். 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு அவா் விக்கெட்டை இழந்தாா். 6-ஆவது பேட்டராக வந்தாா் தோனி.

ஓவா்கள் முடிவில் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 108, தோனி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலா்களில் மாட் ஹென்றி, மோசின் கான், யஷ் தாக்குா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா், 211 ரன்கலை இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னௌ பேட்டிங்கில், தொடக்க வீரா் குவின்டன் டி காக் 0, கேப்டன் கே.எல்.ராகுல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஒன் டவுனாக வந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக ரன்கள் விளாசத் தொடங்கினாா்.

மறுபுறம் தேவ்தத் படிக்கல் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நிகோலஸ் பூரன் சற்று நிலைத்தாா். அவருடனான ஸ்டாய்னிஸ் கூட்டணிக்கு 70 ரன்கள் கிடைத்தது. பூரன் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

முடிவில் ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 124, தீபக் ஹூடா 6 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் மதீஷா பதிரானா 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், தீபக் சஹா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com