
நடப்பு ஐபிஎல் தொடரில் தான் சரியாக விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக, ஹார்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் நியமித்தது.
அணியில் ஒரு வீரராக பங்கேற்று விளையாடிய ரோஹித் சர்மா, நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. கடந்த 6 போட்டிகளில் அவர் 20 ரன்களைக் கூட குவிக்கவில்லை.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் சரியாக விளையாடவில்லை எனவும், அதனை நினைத்து அதிகம் யோசிக்காமல் தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு பேட்ஸ்மேனாக நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக விளையாடிய பிறகும் போட்டிகளில் சரியாக விளையாடாததை நினைத்து அதிகம் யோசித்தால், என்னால் இனிவரும் போட்டிகளிலும் நன்றாக விளையாட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். சரியான மனநிலையில் இருக்க முயற்சி செய்கிறேன்.
நடப்பு ஐபிஎல் தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற விரும்புகிறேன். நடப்பு ஐபிஎல் தொடர் எங்களது திட்டப்படி செல்லவில்லை. அதற்கு எங்களை நாங்களேதான் குறை கூறிக் கொள்ள வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் அளவுக்கு அதிகமான தவறுகளை செய்துவிட்டோம். நிறைய போட்டிகளில் தோற்றுவிட்டோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.