
ஐபிஎல் இறுதிப்போட்டிக்குப் பிறகு போட்டி குறித்து தங்களது கருத்துகளை இரு அணியின் கேப்டன்களும் பகிர்ந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 26) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டிக்குப் பிறகு இரு அணிகளின் கேப்டன்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா கேப்டன்)
முற்றிலும் சிறப்பான வெற்றி. ஒரு அணியிடமிருந்தும், தனிநபரிடமிருந்தும் இதனையே நாங்கள் எதிர்பார்த்தோம். அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சரியான தருணத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே அசைக்க முடியாத அணியாக நாங்கள் இருந்துள்ளோம். இந்த ஐபிஎல் தொடரில் எங்களிடம் எந்த ஒரு குறையும் இல்லை. தொடரின் முதல் போட்டியிலிருந்தே மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தபோதிலும், அணியில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளோம்.
போட்டி இரண்டு அணிகளுக்கும் சாதகமாக முடிவதற்கான வாய்ப்பு இருந்தது. சன்ரைசர்ஸ் அணியும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். சன்ரைசர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு போட்டிகளிலுமே அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு முதலில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. முக்கியமான போட்டிகளில் அனுபவமிக்க வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டார். மிகவும் அழுத்தமான சூழலில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக செயல்பட்டார். ரஸலும் சிறப்பாக பந்துவீசினார். அவர்கள் இருவரும் சரியான தருணத்தில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த சீசன் கொல்கத்தாவுக்கு குறைகளற்ற சீசனாக அமைந்தது.
பாட் கம்மின்ஸ் (ஹைதராபாத் கேப்டன்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். துரதிருஷ்டவசமாக, மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சு போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதிப்போட்டியில் எங்களுக்கு சிறப்பாக விளையாட அவர்கள் வாய்ப்பு கொடுக்கவே இல்லை. கடந்த வாரம் அகமதாபாதில் சிறப்பாக பந்துவீசியதைப் போலவே, இறுதிப்போட்டியிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆடுகளம் கணிப்பதற்கு சற்று கடினமானதாக இருந்தது. 160 ரன்கள் எடுத்திருந்தால், நாங்கள் எதிரணிக்கு நெருக்கடி அளித்திருப்போம். 200 ரன்களுக்கும் அதிகமாக குவிப்பதற்கு ஏதுவான ஆடுகளமாக தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் எடுத்திருந்தால், எங்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு நிறைய நேர்மையான விஷயங்கள் எடுத்துக் கொள்வதற்கு இருக்கின்றன. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். 250 ரன்கள் அடிப்பது மட்டுமின்றி, அதனை மூன்று முறை செய்துள்ளோம். அழுத்தமான சூழல்களிலும் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். புவனேஷ்குமார் போன்ற மூத்த வீரர்களுடன் விளையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. இளம் வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். கடந்த இரண்டு மாதங்களும் சிறப்பானதாக அமைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.