முகப்பு விளையாட்டு ஒலிம்பிக்ஸ்
இதயங்களை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி: 4-வது இடம் பிடித்தது
By DIN | Published On : 06th August 2021 11:33 AM | Last Updated : 06th August 2021 11:35 AM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.
மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று சந்தித்தது.
ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு இந்திய மகளிர் அணி சுறுசுறுப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து முன்னணி பெற்றது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. ரியோ ஒலிம்பிக்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, மீண்டும் 2 கோல்களை அடித்து 4-3 என ஆட்டத்தை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
டோக்கியோவிலிருந்து பதக்கம் எதுவும் பெறாமல் இந்திய மகளிர் அணி வெளியேறினாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலமாக இந்திய ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்கள். தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியிலேயே அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது. முதலில் மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாகத் தோற்றபோதும் வலுவான அணிகளுடன் கடுமையாகப் போட்டியிட்டது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. இன்றைய போட்டியில் கூட இங்கிலாந்துக்குச் சவாலாக அமைந்தது. இனிமேல் எந்த அணியும் இந்திய மகளிர் அணியை லேசில் எடை போட முடியாது. இந்தப் புதிய அத்தியாயம், இந்திய மகளிர் ஹாக்கிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.