7 பதக்கங்கள்: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சாதனை
By DIN | Published On : 07th August 2021 06:17 PM | Last Updated : 07th August 2021 07:01 PM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணிக்கு அதிகப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி அதிகபட்சமாக 6 பதக்கங்களை வென்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்ஸில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 2 பதக்கங்களை மட்டுமே வென்றது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. 1 தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 47-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய அணிக்கு இன்று கடைசி நாள். கோல்ப் வீராங்கனை அதிதி அசோக், நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். எனினும் மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கமும் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும் வென்று அசத்தியுள்ளார்கள்.
இதையடுத்து அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி மேலும் பல பதக்கங்களைப் பெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.