புதிய சாலை, குடிநீர் குழாய் இணைப்பு, விளையாட்டு அகாதமி: புதிய கவனிப்பில் ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவின் கிராமம்

ஒருவருடத்துக்குள் குடிநீர் குழாய் இணைப்பு, விளையாட்டு அகாதமி போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்...
புதிய சாலை, குடிநீர் குழாய் இணைப்பு, விளையாட்டு அகாதமி: புதிய கவனிப்பில் ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவின் கிராமம்

ஒலிம்பிக் பதக்கத்தால் லவ்லினா கிராமத்துக்குப் புதிய சாலை மட்டுமல்ல குடிநீர் குழாய் இணைப்பு, விளையாட்டு அகாதமி போன்றவையும் அடுத்தடுத்துக் கிடைக்கவுள்ளன. 

இனிமேல், பாரோ முகியா கிராம மக்கள் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரும் லவ்லினாவின் ஒலிம்பிக் பதக்கத்தை நினைவூட்டும் தானே! 

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். லவ்லினாவின் இந்த வெற்றி அவருடைய கிராமத்துக்குப் பல அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்துகொண்டிருக்கிறது.

அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில், சாருபதர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாரோ முகியா கிராமத்தில் லவ்லினாவின் பெற்றோர் வசிக்கிறார்கள். குவாஹாட்டியிலிருந்து 300 கி.மீ. தூரம். 

லவ்லினா வீடு
லவ்லினா வீடு

முதலில் கிராமத்துக்குப் புதிய சாலை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. அடுத்ததாக குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து தரப்படவுள்ளது. இதுமட்டுமல்ல, லவ்லினா வீட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஒரு விளையாட்டு அகாதமியை அமைக்கவும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிஸ்வாஜித் புகன் (பாஜக), மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

விளையாட்டு அகாதமி தொடர்பாக முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் பேசியுள்ளேன். நல்லவிதமாகப் பேசினார் என்கிறார் பிஸ்வாஜித் புகன். அரசு நிலத்தில் 5.35 ஹெக்டேரில் விளையாட்டு அகாதமி அமைக்கப்படுகிறது. ஒரு விளையாட்டு மைதானம், உள்ளூர் அரங்கம், குத்துச்சண்டை அரங்கம், வில்வித்தைப் போட்டிக்கான பகுதி மற்றும் இதர வசதிகள் அகாதமியில் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன.

புதிய சாலை
புதிய சாலை

அரசின் நிதியுதவியுடன் ரூ. 15 கோடிக்குத் திட்டம் அமைக்கப்படும். இதற்கான நிலத்தைப் பார்வையிடச் சென்றபோது மக்கள் மிகவும் உற்சாகமானார்கள். ஜெய் ஜீவன் திட்டத்தின்படி லவ்லினாவின் கிராமத்துக்குக் குடிநீர் வழங்கும் திட்டமும் நிறைவேற்றித் தரப்படும் என்றார். ஒருவருடத்துக்குள் குடிநீர் குழாய் இணைப்பு, விளையாட்டு அகாதமி போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என அவர் உறுதியளிக்கிறார். 

கோல்காட் மாவட்டத்தில் உள்ள பர்பாதர் நகரிலிருந்து லவ்லினாவின் கிராமத்துக்கு 3.5 கி.மீ. தூர கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான சிக்கல்களால் சாலையை விரிவாக்க முடியவில்லை என்று பொதுப்பணித் துறையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கூறினார். இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்தித் தரும் சட்டமன்ற உறுப்பினருக்கு லவ்லினாவின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்பு, கிராமத்துக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்தார்கள். இப்போது பல வசதிகள் செய்துத் தரப்படுகிற நிலைவில் அவர்கள் ஓர் எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். தடகள வீராங்கனை ஹிமா தாஸ் பல போட்டிகளில் வெற்றி அடைந்த பிறகு அவர் மீது அதிகக் கவனம் ஏற்பட்டது. இது அவருடைய திறமையை நாளடைவில் குறைத்தது. உலக யு-20 சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் ஹிமா தாஸ் வென்றபிறகு மத்திய அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள அவருடைய காந்துலிமாரி கிராமத்துக்கு ஏராளமான வசதிகள் செய்துதரப்பட்டன. அதுபோல இல்லாமல், கிராமத்துக்கு வசதிகள் கிடைத்த பிறகும் மேலும் புகழடைந்த பிறகும் லவ்லினா தொடர்ந்து வெற்றிகளை அடைந்து பல பதக்கங்களை நாட்டுக்குத் தரவேண்டும் என்பது உள்ளூர் மக்களின் விருப்பம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com