'திருப்பி கொடுக்கனும்ல..': ரஜினி பாணியில் சாதித்துக் காட்டிய யுவ்ராஜ் சிங்!

ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்தது பலருக்கும் நினைவிலிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய 14 நாள்கள் யுவ்ராஜ் சிங்கின் பின்னிரவுகள் பற்றி சிலருக்கே நினைவிலிருக்கும்.
'திருப்பி கொடுக்கனும்ல..': ரஜினி பாணியில் சாதித்துக் காட்டிய யுவ்ராஜ் சிங்!


ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்தது பலருக்கும் நினைவிலிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய 14 நாள்கள் யுவ்ராஜ் சிங்கின் பின்னிரவுகள் பற்றி சிலருக்கே நினைவிலிருக்கும்.   

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு ஏராளமான வெற்றிகளைத் தேடித் தந்தவர் யுவ்ராஜ் சிங். 2007-இல் டி20 உலகக் கோப்பை, 2011-இல் 50 ஓவர்கள் உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் யுவ்ராஜ் சிங் என்பது நாடறிந்தது.

இந்த வெற்றி நாள்களைக்கூட யுவ்ராஜ் சிங் எளிதாக மறந்துவிடலாம், கடந்துவிடலாம். ஆனால், செப்டம்பர் 5, 2007-ஐ அவரால் நிச்சயம் மறக்க முடியாது.

அப்படி என்ன நாள் அது..?

2007 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அதில் இங்கிலாந்துடனான 6-வது ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டம்தான் யுவ்ராஜ் சிங்கை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டைப் பறிகொடுத்து திணறியபோதிலும், பின்வரிசையில் ஒவைஸ் ஷா மற்றும் லுக் ரைட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், 49 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் என்ற நிலையை அடைந்தது.

இந்த நிலையில்தான், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அஜித் அகார்கர் 8 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். சௌரவ் கங்குலி 7 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். ஆனால், இந்திய அணியின் அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் என்ன நினைத்தாரோ எனத் தெரியவில்லை. 50-வது ஓவரை வீசுமாறு பந்தை யுவ்ராஜ் சிங்கிடம் கொடுத்தார்.

அந்த ஒரு ஓவர்:

ஸ்டிரைக்கில் இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் திமிட்ரி மேஸ்கரன்ஹாஸ். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. 2-வது பந்தை மிட் விக்கெட் திசை நோக்கி தூக்கி அடிப்பார் மேஸ்கரன்ஹாஸ். அதை பியூஷ் சாவ்லா அற்புதமாகப் பிடிக்க அனைவரும் அவுட் என்றே நினைத்தனர். ஆனால், வந்த வேகத்தில் பந்தைப் பிடித்து கட்டுப்பாடு இல்லாமல் சறுக்கியபடியே பவுண்டரி எல்லையைத் தொட்டுவிடுவார் சாவ்லா. இதன்மூலம், துரதிருஷ்டவசமாக அது சிக்ஸராக மாறியது. அது சிக்ஸராக அல்லாமல் விக்கெட்டாக இருந்திருந்தால், அடுத்த 15 நாள்களுக்கு யுவ்ராஜ் சிங் நிம்மதியான தூக்கத்தைப் பெற்றிருப்பார் என்பதுதான் நிதர்சனம்.

அது சிக்ஸராக மாறிய விளைவு அடுத்த 4 பந்துகளையுமே மேஸ்கரன்ஹாஸ் தொடர்ச்சியாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்ததன்மூலம், அந்த ஓவரில் இங்கிலாந்து அணி 30 ரன்கள் எடுத்து 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்களை எட்டியது.

சர்வதேச அளவிலான ஒரு ஆட்டத்தில், தொடர்ச்சியாக 5 சிக்ஸரை விட்டுக்கொடுத்ததை எந்தவொரு பந்துவீச்சாளராலும் எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியாது. பகுதிநேர பந்துவீச்சாளராக இருந்தாலும்கூட, யுவ்ராஜ் சிங்கை அது பெரிதும் பாதித்தது.

இதுபற்றி யுவ்ராஜ் சிங் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கையில், "கடைசி ஓவரை கேப்டன் (ராகுல் டிராவிட்) எதற்காக என்னை வீசச் சொன்னார் எனத் தெரியவில்லை. அடுத்த 15 நாள்களுக்கு என்னால் தூங்கவே முடியவில்லை. நண்பர்களிடமிருந்து வந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மனமுடையச் செய்தது. நான் சதமடித்தபோதுகூட இத்தனை அழைப்புகள் எனக்கு வந்ததில்லை" என்றார். 

சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கரின் அற்புதமான தொடக்கம், ராபின் உத்தப்பாவின் அதிரடியான பினிஷிங்கால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்புடன் வைத்திருந்தது வேறு விஷயம். 

எனினும், யுவ்ராஜ் சிங்கைப் பொறுத்தவரை, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அது மிகவும் மோசமான நாள்.

சிவாஜி படத்தில் வில்லன் கதாபாத்திரமான சுமன் ஒரு காட்சியில் ரஜினியை அடிக்கும்போது, 1.. 2.. 3.. என ரஜினி கணக்கு வைப்பார். இதுபற்றி சுமன் கேட்பதற்கு 'திருப்பி கொடுக்கனும்ல' என்று வசனம் பேசுவார் ரஜினி.

யுவ்ராஜ் சிங்கும் ரஜினி போலவே மேஸ்கரன்ஹாஸ் சிக்ஸர் அடித்ததை ஒவ்வொன்றாக கணக்கு வைத்துக்கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால், கணக்கு வைத்ததைப்போலவே வட்டியும் முதலுமாகத் திருப்பிக்கொடுத்துவிட்டார் யுவ்ராஜ் சிங்.

இங்கிலாந்துடனான இந்தத் தொடருக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றது. மேஸ்கரன்ஹாஸ் 5 சிக்ஸர்கள் அடித்ததிலிருந்து சரியாக 14-வது நாளில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. 

கம்பீரும், சேவாக்கும் அதிரடியான தொடக்கத்தைத் தந்து நல்ல அடித்தளம் அமைத்து வைத்திருந்தனர். 17-வது ஓவரின்போது களமிறங்கிய யுவ்ராஜ் சிங், வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து, 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார். இந்தச் சூழலில் 18-வது ஓவரின் முடிவில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் யுவ்ராஜ் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிளின்டாப்.

இந்தக் கோபம் மொத்தத்தையும், அடுத்து வீசிய பிராட் ஓவரில் காட்டினார் யுவ்ராஜ். அந்த ஓவரில் வீசப்பட்ட 6 பந்துகளும் மைதானத்தின் 6 திசைகளுக்கு சிக்ஸராகப் பறந்தன. டி20 கிரிக்கெட்டில், டி20 உலகக் கோப்பையில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பது இதுவே முதன்முறை.

மிரட்டலான இந்த சாதனையைப் புரிந்த பிறகு யுவ்ராஜ் சிங், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிளின்டாப்பையும் பார்க்கவில்லை, பந்துவீசிய பிராட்டையும் பார்க்கவில்லை. அவர் பார்த்தது, 15 நாள்களுக்கு முன்பு தனது ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த மேஸ்கரன்ஹாஸை. 

மேற்குறிப்பிட்ட அதே சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யுவ்ராஜ் சிங் மேலும் தெரிவித்ததாவது:

"6 சிக்ஸர்கள் அடித்தவுடன், நான் பிராட்டையோ, வேறுயாரையோ பார்க்கவில்லை. திமிட்ரியைத்தான் (மேஸ்கரன்ஹாஸ்) பார்த்தேன். இதோடு இது முடிவுக்கு வந்துவிட்டது என்று அவரிடம் கூறினேன். அதே அணிக்கு எதிராக 6 சிக்ஸர்களை அடித்தது திருப்திகரமாக இருந்தது."

சிவாஜி படத்தில் வரும் ரஜினியைப்போல், ஒவ்வொரு சிக்ஸரையும் கணக்கு வைத்திருந்த யுவ்ராஜ் சிங் கூடுதலாக ஒரு சிக்ஸரோடு 6 சிக்ஸராகத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அதுவும் வெறும் 2 வார இடைவெளியில். பிறகு ஏன் இது யுவ்ராஜ் சிங்குக்கு திருப்திகரமாக இருக்காது. 

5 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்து ரசிகர்களிடம் விமரிசனங்களை சம்பாதித்திருந்தாலும்கூட, அவர் நாடு திரும்பும்போது 6 சிக்ஸர்கள் அடித்த சாதனை நாயகனாகத்தான் தாயகத்தில் கால் பதித்தார்.

தோல்விகளால் துவண்டுவிடாமல், அதே தோல்வியை சாதனைக்கான உத்வேகமாக எடுத்துக்கொண்டு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்பதைத்தான் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் யுவ்ராஜ்.

சிங் இஸ் கிங்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com