ஓவல் டெஸ்ட் வெற்றி: இந்திய அணி நிகழ்த்திய சாதனைகள்

இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் விராட் கோலி.
ஓவல் டெஸ்ட் வெற்றி: இந்திய அணி நிகழ்த்திய சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியினால் இந்திய அணி மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. ஓவல் டெஸ்ட் புள்ளிவிவரங்கள்:


2

வெளிநாடுகளில் முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்குக் குறைவாக எடுத்தும் இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்டுகளின் எண்ணிக்கை. இதற்கு முன்பு, 2018-ல் ஜொகன்னஸ்பர்க்கில் முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் மட்டும் எடுத்தாலும் இந்திய அணி அந்த டெஸ்டை வென்றது. இப்போது ஓவல் டெஸ்டில் 2-வது முறையாக. 

2

ஓவல் மைதானத்தில் 14 டெஸ்டுகள் விளையாடி 2 வெற்றிகளை அடைந்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பு 1971-ல் தான் வெற்றி பெற்றது. 50 வருடங்கள் கழித்து ஓவல் மைதானத்தில் மீண்டும் வெற்றி அடைந்துள்ளது இந்திய அணி.

368 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 368 மற்றும் அதற்கு அதிகமான ரன்களைக் கொண்ட இலக்கை இங்கிலாந்து அணி ஒருபோது அடைந்ததில்லை. இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா மட்டுமே இந்த இலக்கை அடைந்துள்ளது. 1948-ல் லீட்ஸ் மைதானத்தில் 406/4 ரன்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 362/9 ரன்கள் என்கிற இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. 

1

சேனா நாடுகளில் ( SENA, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) முதல்முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் ரோஹித் சர்மா. 

100 ரன்கள்

இங்கிலாந்து அணி 4-வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்தது. பிறகு 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதற்கு முன்பு 2016-ல் இதே 100 ரன்களை 4-வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு எடுத்தது. அந்த ஆட்டத்தில் பிறகு 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

1986

கடைசியாக இங்கிலாந்தில் இந்திய அணி 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது 1986-ல் தான். கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது. 

1

முதல்முறையாக இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி லண்டனில் உள்ள மைதானங்களான லார்ட்ஸ், ஓவல் என இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 

3

இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்பு கபில் தேவ் அதிகபட்சமாக 2 வெற்றிகளைப் பெற்றிருந்தார். 

24

24 டெஸ்டுகளில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து குறைந்த டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பும்ரா. இதற்கு முன்பு கபில் தேவ் 25 டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டினார். 

8

ஓவல் டெஸ்டில் தனது 8-வது சதத்தை அடித்துள்ளார் ரோஹித் சர்மா. அவர் சதம் அடித்த அனைத்து டெஸ்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சாதனை வேறு யாருக்கும் கிடையாது. இவருக்கு அடுத்ததாக, ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆர்ம்ஸ்டிராங் (6), டேரன் லேஹ்மன் (5) ஆகிய இருவரும் சதங்கள் அடித்த டெஸ்டுகளில் வெற்றிகளைக் கண்டுள்ளார்கள். 

99 ரன்கள்

டெஸ்டுகளில் இதற்கு முன்பு முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கும் அதிகமாகப் பின்தங்கியிருந்தாலும் இந்திய அணி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. 2001 ஈடன் கார்டன்ஸில் 274 ரன்கள் பின்தங்கி பிறகு வெற்றி பெற்றது. 1981-ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 182 ரன்கள் பின்தங்கி பிறகு வெற்றி பெற்றது. 1976-ல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக 131 ரன்கள் பின்தங்கி பிறகு வெற்றி பெற்றது. 2004 மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 99 ரன்கள் பின்தங்கி பிறகு வெற்றி பெற்றது. இந்த ஓவல் டெஸ்டிலும் இதே 99 ரன்கள் பின்தங்கி வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. 

99 ரன்கள்

99 ரன்கள் மற்றும் அதற்கு அதிகமாக முன்னிலை பெற்றும் சொந்த மண்ணில் மூன்றாவது முறையாத் தோற்றிருக்கிறது இங்கிலாந்து அணி. 1961-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 177 ரன்கள் முன்னிலை பெற்றது. 2014-ல் இலங்கைக்கு எதிராக 108 ரன்கள் முன்னிலை பெற்றது. இப்போது ஓவலில் 99 ரன்கள் முன்னிலை. இருந்தும் இந்த மூன்று ஆட்டங்களிலும் இங்கிலாந்துக்குத் தோல்வியே கிடைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com