சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் (53 வயது) எம்.எஸ். தோனி கேப்டனாக இல்லாமல் இதுவரை எந்த ஒரு கோப்பையையும் அவரது பயிற்சியாளர் பதவியில் பெற்றதில்லை. 37 சீசன்களில் 7 சீசன்களில் மட்டுமே கோப்பை வென்றுள்ளார். அந்த ஏழும் தோனி கேப்டன்சியில் என்பது நம்மில் பலருக்கும் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், அதுதான் கசப்பான உண்மையாக இருக்கிறது.
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதுபோல இதுவரை எம்.எஸ். தோனியின் நிழலில் வெற்றிக்கான பெயர், புகழினை அனுபவித்து வந்துள்ளார் ஸ்டீஃபன் பிளெமிங்.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் பிளெமிங் ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் 10 போட்டிகளில் 196 ரன்கள் எடுத்து ஓய்வு பெற்றார். பின்னர், 2009ல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
ஐபிஎல் தொடரில் 10 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற சிஎஸ்கே, 2010, 2011, 2018, 2021, 2023ல் கோப்பை வென்றுள்ளது. இதெல்லாம் இவரது பயிற்சிக்காலத்தில்தான் என்பது புள்ளிவிவரக் கணக்கின்படி சரியாக இருந்தாலும் இதற்கெல்லாம் காரணமாக உலகின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ். தோனிதான் என்பது கடந்த மூன்று சீசன்களாக (2024, 2025, 2026) அப்படமாக தெரியவந்துள்ளது. பூ எது, நார் எது என்பதை சிஎஸ்கே ரசிகர்கள் பிரித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் விளையாடாத நிலையில், புணே அணிக்கும் இவர்தான் பயிற்சியாளராக இருந்தார். அங்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையில், ஒரு சீசன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெளிநாட்டு அணிகளுக்கும் ஸ்டீஃபன் பிளெமிங்தான் பயிற்சியாளராக இருக்கிறார். ஆனால், இதுவரை ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாக இருக்கிறது. அங்கும் தோனி கேப்டனாக இருந்திருந்தால், பிளெமிங் கோட்டையில் கொடிதான் பறந்திருக்கும் போலிருக்கிறது. சரி, என்னென்ன தொடர்களில் என்னென்ன சாதித்து இருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
ஐபிஎல்: 5 ஐபிஎல் கோப்பைகள் ( 2010, 2011, 2018, 2021, 2023) - (தோனி கேப்டன்)
சிஎல்டி20: சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கே அணி 2 கோப்பைகள் (2010, 2014) - (தோனி கேப்டன்) வென்றது. 2009 முதல் 2014 வரை மட்டுமே இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
எம்எல்சி: அமெரிக்காவில் 2023 முதல் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் (டிகேஎஸ்) என்ற அணிக்கு பிளெமிங் பயிற்சியாளராக இருக்கிறார். இதுவரை ஒரு கோப்பைக்கூட வென்றதில்லை. இறுதிப் போட்டிக்குக்கூட முன்னேறியதில்லை என்பதும் அங்கு தோனி விளையாடுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
எஸ்ஏ20: தென்னாப்பிரிக்காவில் 2023 முதல் நடைபெறும் இந்த லீக்கில் ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இதிலும் இதுவரை கோப்பை வென்றதில்லை; இறுதிப் போட்டிக்கும் முன்னேறியதில்லை!
தி ஹன்ட்ரட்: இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் தொடரில் சௌதர்ன் பிரேவ் அணிக்கு 2023, 2024 சீசனில் பயிற்சியாளராக இருந்தார். கோப்பை வெல்லாத அவர் 2025ல் விலகினார்.
பிபிஎல்: ஆஸ்திரேலியாவில் 2011 முதல் பிக் பேஷ் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. (2005ல் வேறு பெயரில் தொடங்கி பின்னர் பெயர் மாற்றம் பெற்றது. ஐபிஎல் தொடருக்கு முந்தையது இதுதான்!)
இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக 2015 முதல் 2019 வரை பயிற்சியாளராக இருந்தார். இதிலும் ஒரு கோப்பையும் வென்றதில்லை; அதிசயமம் என்னவென்றால், ஒரு முறை 2018\19 சீசனில் இறுதிப் போட்டி வரைக்கு முன்னேறியது.
சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராக இருக்க சுமார் ரூ.4 -5 கோடி வரை சம்பளம் பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. மற்ற சிஎஸ்கே அணிகளான ஜேஎஸ்கே, டிகேஎஸ் அணிகளுக்கும் சேர்த்து 8 கோடி வரை சம்பளம் பெறலாம்.
சிஎஸ்கே அணியைத் தவிர எங்குமே கோப்பை வெல்லவில்லை. அதிலும் தோனி கேப்டனாக இல்லாதபோது ஐபிஎல் தொடரிலும் அணி மோசமாக இருந்துள்ளது.
ஏமாற்றுக்காரர்?
அணித் தேர்வு, ஆட்டத்திற்கான வியூகம் என எதிலுமே புதியதாக செய்யாதவர்தான் ஸ்டீஃபன் பிளெமிங். அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் டெத் ஓவரில் இவரது பயிற்சியில் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
எல்லா டி20 லீக்கிலும் ஒரே மாதிரியான (ஸ்டம்புக்கு பின்புறமாகச் சென்று வைட் யார்க்கர் பந்து வீசுவது. அதிலும் மிதவேகம் கொண்ட வீரர்களை வைத்து) அணுகுமுறையினால் தோல்வியைச் சந்தித்து வருகிறார்.
This CSK clown management repeats such shit in every sister franchise. So it's high time to sack these members of management and bring complete revolution like what rcb did in recent years.
— META_07 (@Dhonizenith07) April 6, 2026
-More indian core â
-Proper Data analytics â
-More onfield involvement with player â pic.twitter.com/SyxBwAxVaO
மற்றுமொரு நேர்காணலில் அஸ்வின், “நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் சிஎஸ்கேவின் 99 சதவிகித வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி என்ற ஒரு மனிதர் மட்டுமே. அவர் கேப்டனாக, ஆலோசகராக, பயிற்சியாளராக எல்லாவுமாக இருப்பார். மக்கள் எங்களை தந்தையர்களின் ராணுவம் (டேடிஸ் ஆர்மி) என கிண்டல் செய்தார்கள். இருந்தும் அவர்களை வைத்து ஐபிஎல் கோப்பையை வென்றவர். விமர்சகர்கள் என்ன கூறினாலும் அவர் வென்றுகொண்டே இருந்தார்” என்றார்.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடியதும் மினி ஏலத்திலாவது தேவையான வீரர்களை எடுத்திருக்கலாம். ஆனால், அதிலும் சொதப்பினார். ருதுராஜ் கெய்க்வாட்டும் கேப்டன்சியில் மோசமாக செயல்படுவதால், பிளெமிங் - ருதுராஜ் கூட்டணிக்கும் பிளெமிங் - தோனி கூட்டணிக்குமான வித்தியாசங்கள் பளிச்சென்று தெரிகின்றன.
தில்லி அணியை தமிழர் (ஹேமங்க் பதானி) சிறப்பாக வழிநடத்துகிறார். ஆர்சிபி அணிக்கு தினேஷ் கார்த்திக் கோப்பை வென்று கொடுத்துள்ளார். இனியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விழித்துக்கொண்டு திறமையான தமிழர்களையோ அல்லது திறமையான ஒரு பயிற்சியாளரையோ பதவிக்கு அமர்த்தாவிட்டால் சிஎஸ்கே அணிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் நிகர சொத்து மதிப்பும் (வணிக மதிப்பும்) காணாமல் போய்விடும்!
Summary
Stephen Fleming—the coach who hasn't won a single trophy without Dhoni! Is he a disappointment?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிளெமிங் விலகல்: சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் தோனி?








