

ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைப் பெற்றிருந்த பார்சிலோனா அணியின் சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட் அணி.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்பேன்யால் அணியைத் தோற்கடித்தது. மாட்ரிட் அணி தரப்பில் ரோட்ரிகஸ், முதல் பாதி ஆட்டத்தின் "இஞ்சுரி' நேரத்திலும் (45+2), பென்ஸீமா
71-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் லீகில் தொடர்ச்சியாக 16-ஆவது வெற்றியைப் பெற்றது மாட்ரிட். இதன்மூலம் ஸ்பெயின் லீகில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைப் பெற்றிருந்த பார்சிலோனாவின் சாதனையை சமன் செய்தது. பார்சிலோனா அணி 2010-11 சீசனில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைப் பெற்றிருந்தது.
இந்த சீசனில் தொடர்ச்சியாக 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள மாட்ரிட் அணி, புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னணி வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல் ஆகியோர் இல்லாத நிலையில் எஸ்பேன்யால் அணியைத் தோற்கடித்துள்ளது மாட்ரிட்.
வெற்றி குறித்துப் பேசிய மாட்ரிட் அணியின் கோல் கீப்பர் கிகோ கேஸில்லா, "புள்ளிகளை சேர்ப்பது என்பது மிக முக்கியமானதாகும். நாங்கள் மீண்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.