ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகிய வீரர்கள் யார் யார்?

முன்னணி இந்திய வீரர்கள் வீரர்கள் உள்பட பலர் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். 
ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகிய வீரர்கள் யார் யார்?
Updated on
2 min read

வேறெந்த ஐபிஎல்-லிலும் இதுபோல ஏற்பட்டதில்லை. முன்னணி இந்திய வீரர்கள் வீரர்கள் உள்பட பலர் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். 

அஸ்வின், ராகுல், விஜய் என மூன்று முக்கிய இந்திய வீரர்கள் ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். விஜய் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களில் டி காக், டுமினி, ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், பீட்டர்சன் ஆகிய வீரர்கள் காயம் மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். ஜனவரி 31, 2017 முதல் ஜனவரி 30, 2018 வரையுள்ள தடைக்காலத்தில் ரஸலால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது. எனவே அவரால் இந்த ஐபிஎல்-லி ல் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.

அதேபோல ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கடந்த சில மாதங்களாக பல்வேறு லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்ததன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளார் பீட்டர்சன். கடந்த ஐபிஎல் சீசனில் புணே அணியில் இடம்பெற்ற பீட்டர்சன் 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விலகினார். அதைத் தொடர்ந்து அவரை புணே அணி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்களில் விளையாடமாட்டார்கள். இருவரும் அவரவர் அணிகளின் முதலிரண்டு ஆட்டங்களில் விளையாடாமல், மூன்றாவது ஆட்டத்திலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக ஆரம்ப ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோலி பெங்களூர் அணியுடன் நாளை இணைகிறார். அவருடைய உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவர் மற்றும் முடநீக்கியல் நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்வார்கள். அதன்பிறகே கோலியின் காயம் குறித்து முழுவிவரம் தெரியவரும். 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பதால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் இப்போது ராகுலும் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

 24 வயதான ராகுலுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டபோதும், ஆஸ்திரேலியத் தொடரில் வலியோடே விளையாடி முடித்தார். அந்தத் தொடரில் ராகுல் 393 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் முரளி விஜய் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளது. அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகலாம் என தெரிகிறது. விஜயின் மருத்துவ அறிக்கைக்காக பஞ்சாப் அணி காத்திருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் வீரர் அஸ்வின் விலகியுள்ளார். அவர், "ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' (அடிவயிற்றுப் பகுதியில் லேசான தசை கிழிவு) பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வு அவசியமாகும். அதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியிருக்கிறார். அவர், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக பூரண குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதன் காரணமாக அவர் இப்போது காயத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்.

பட்டியலில் நாளுக்கு நாள் புதுப்புது வீரர்கள் சேர்கிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம், அவர்கள் இடத்தில் நிறைய புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. இதனால் இந்த ஐபிஎல் புதுமாதிரியான அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com