ஸ்மித், ரஹானே அதிரடி: புணே 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத் தோற்கடித்தது.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 54 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் அஜிங்க்ய ரஹானே 34 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார்.
புணேவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியில் பார்த்திவ் படேல்-ஜோஸ் பட்லர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்தது. பார்த்திவ் படேல் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பின்னர் வந்த கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் நடையைக் கட்டினார். இதன்பிறகு ஜோஸ் பட்லர் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், நிதிஷ் ராணா 28 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அம்பட்டி ராயுடு 10, கிருனால் பாண்டியா 3 ரன்களில் நடையைக் கட்ட, மும்பையின் ரன் வேகம் குறைந்தது.
இதையடுத்து ஹார்திக் பாண்டியாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். பாண்டியா நிதானம் காட்ட, போலார்ட் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 18.2 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து வந்த டிம் செளதி 19-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸரை விளாச, அசோக் திண்டா வீசிய கடைசி ஓவரில் பாண்டியா, ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 4 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டார். கடைசிப் பந்தில் டிம் செளதி (7 ரன்களில்) ரன் அவுட்டாக, மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. பாண்டியா 15 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கினார் திண்டா. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுக்கப்பட்ட கடைசி ஓவர் இதுதான்.
புணே தரப்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அசோக் திண்டா 4 ஓவர்களில் 57 ரன்களை வாரி வழங்கியபோதும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
ரஹானே அதிரடி: பின்னர் பேட் செய்த புணே அணியில் அதிரடியாக ஆடிய ரஹானே, பாண்டியா வீசிய 2-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளையும், டிம் செளதி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியையும் விரட்ட, 3 ஓவர்களில் 35 ரன்களை எட்டியது.
ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 6 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களம்புகுந்தார். அவர் நிதானமாக ஆட, மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய ரஹானே 27 பந்துகளில் அரை சதம் கண்டார். புணே அணி 10.1 ஓவர்களில் 93 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய ஸ்மித் 37 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனிடையே பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களில் நடையைக் கட்ட, தோனி களம்புகுந்தார். புணேவின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டன.
ஆனால் 18, 19-ஆவது ஓவர்களை வீசிய மெக்லீனாகான், ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் தலா 7 ரன்களை மட்டுமே கொடுக்க, கடைசி ஓவரில் புணேவின் வெற்றிக்கு 13 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை வீசிய போலார்ட் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இதனால் மும்பை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 மற்றும் 5-ஆவது பந்துகளில் ஸ்மித் சிக்ஸரை விளாச, 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து 'த்ரில்' வெற்றி கண்டது புணே. ஸ்மித் 54 பந்துகளில் 84, தோனி 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் டிம் செளதி, ஹார்திக் பாண்டியா, மெக்லீனாகான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இன்றைய ஆட்டம்
குஜராத்-கொல்கத்தா
இடம்: ராஜ்கோட்
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ்,
சோனி சிக்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...