நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை ஓபன்: மலரும் நினைவுகள்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன், இந்த ஆண்டு புணேவுக்கு மாற்றப்பட்டு மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில்

News image
Updated On :31 டிசம்பர் 2017, 7:42 pm

ஏ.வி. பெருமாள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன், இந்த ஆண்டு புணேவுக்கு மாற்றப்பட்டு மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
 வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் களைகட்டியிருக்கும் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சென்னை ஓபன் இல்லாததால், இந்த ஆண்டு பொலிவிழந்துள்ளது.சென்னை ஓபன் நடைபெறுகிறபோது, மைதானத்துக்கு எதிரேயுள்ள டீக்கடையில் பிரெட் ஆம்லெட் சாப்பிடுவதற்காகவே ஒரு கூட்டம் கூடும்.
 சென்னை ஓபன் போட்டியைக் காண பிரபலங்கள் படையெடுப்பது வழக்கம். அவர்களில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபல இயக்குநர் மணிரத்னம், அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினி, நடிகை ரம்யாகிருஷ்ணன், நடிகர் தலைவாசல் விஜய், பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 பிடித்த வீரர்: சென்னை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரர் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காதான். அவர் களமிறங்கிவிட்டால் "வாவ்ரிங்கா... வாவ்ரிங்கா...' என்று ரசிகர்கள் சப்தமிடும்போது மைதானம் அதிரும். இதனால் அவர் எப்போதுமே சென்னை ஓபனில் இருந்தே ஒரு சீசனை தொடங்குவார். சென்னை ஓபனில் 4 முறை பட்டம் வென்ற அவரே, இன்றளவிலும் சென்னை ஓபனில் அதிகமுறை பட்டம் வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.
 அசராத டிப்சரேவிச்: 2012 சென்னை ஓபனில் யாருமே எதிர்பாராத வகையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் 21 வயது இளைஞரான கனடாவின் மிலோஸ் ரயோனிச். இறுதிச்சுற்றில் அவரை எதிர்த்து அனுபவமும், ஆக்ரோஷமும் மிக்கவரான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் களம்புகுந்தார். இந்த ஆட்டத்தில் டிப்சரேவிச்சே பட்டம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
 ஆனால் அனைவருடைய எதிர்பார்ப்பையும் தகர்த்தார் ரயோனிச். 6.5 அடி உயரம் கொண்ட ரயோனிச் 35 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட, அனுபவ வீரரான டிப்சரேவிச்சும் விடாப்பிடியாகப் போராடினார். இதனால் ஆட்டத்தின் 3 செட்களுமே டைபிரேக்கருக்கு சென்றது. 3 மணி 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் ரயோனிச் 6-7 (4/ 7), 7-6 (7/ 4), 7-6 (7- 4) என்ற செட் கணக்கில் டிப்சரேவிச்சை வீழ்த்தி சென்னை ஓபன் சாம்பியன் ஆனார்.
 சென்னை ஓபனில் நீண்ட நேரம் நடைபெற்ற இறுதி ஆட்டம் என்ற பெருமையும் இந்த ஆட்டத்துக்கு கிடைத்தது. 2008-க்குப் பிறகு ஒரு சர்வீûஸக்கூட இழக்காமல் ஒரு தொடரை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார் ரயோனிச். 2012 சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவிலும் பயஸýடன் சேர்ந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார் டிப்சரேவிச். மற்ற விளையாட்டுகளோடு ஒப்பிடுகையில், டென்னிஸ் விளையாட அதிக ஆற்றலும், உடற்தகுதியும், மனவலிமையும் தேவை.
 ஒரு மணி நேரம் விளையாடினாலே மிகுந்த களைப்பு ஏற்படும். ஆனால் ஒற்றையர் பிரிவில் 3 மணி நேரத்துக்கும் மேல் விளையாடிய நிலையில், இரட்டையர் பிரிவிலும் சளைக்காமல் விளையாடினார் டிப்சரேவிச். அதில் பயஸ்-டிப்சரேவிச் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒற்றையர் பிரிவில் தோற்றபோதிலும், இரட்டையர் பிரிவில் வென்று கோப்பையோடு நாடு திரும்பினார் டிப்சரேவிச்.
 டென்னிஸின் மெக்கா: சர்வதேச டென்னிஸில் கோலோச்சிய இந்தியாவின் தலைசிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரிய நகரமான சென்னையை இந்திய டென்னிஸின் மெக்கா என்று சொன்னால் அது மிகையாகாது.
 தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதன் கிருஷ்ணன் தனது அபார ஆட்டத்தால் உலக டென்னிஸில் இந்தியாவின் பெயரை பதித்தவர் என்றால், அவருடைய மகன் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் அமிர்தராஜ் சகோதரர்கள் இந்திய டென்னிûஸ இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்கள். சென்னையில் செயல்பட்ட பிரிட்டானியா-அமிர்தராஜ் டென்னிஸ் அகாதெமியால் பட்டை தீட்டப்பட்டவர்களில் இந்தியாவின் ஆகச்சிறந்த வீரரான லியாண்டர் பயஸýம், ஒற்றையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட சோம்தேவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
 உலகின் தலைசிறந்த இரட்டையர் ஜோடிகளில் ஒன்றான லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, சென்னை ஓபனில் பட்டம் வென்ற பிறகுதான் வலுவான இணையாக உருவெடுத்தது. சர்வதேச டென்னிஸில் முத்திரைப் பதித்தது. தமிழக வீரர்கள் ராம்குமார், ஜீவன் நெடுஞ்செழியன் போன்றவர்களை டென்னிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் சென்னை ஓபனையே சேரும்.
 சென்னை ஓபன் போட்டியால்தான் உலகின் தலைசிறந்த வீரர்களான பேட்ரிக் ராஃப்டர், போரீஸ் பெக்கர், கார்லஸ் மோயா, ரஃபேல் நடால், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, மரின் சிலிச் போன்ற தலைசிறந்த வீரர்களையும், அவர்களது ஆட்டத்தையும் காணும் வாய்ப்பு சாமானிய ரசிகனுக்கும் கிடைத்தது. டென்னிஸ் பாரம்பரியமிக்க சென்னையிலிருந்து ஸ்பான்சர் பிரச்னையால் சென்னை ஓபன் மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான். எனினும் போட்டி இந்தியாவைவிட்டு வெளியே போகவில்லை என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.