

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் மக்களின் போராட்டத்துக்கு கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. ட்விட்டரில் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டுச் சகோதரர்களிடையே என்ன ஒரு தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு. அவர்களின் நோக்கத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வுக்கும் முயற்சிக்கும் ஆதரவளிக்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவ்வப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து ட்வீட் செய்துவரும் கயிஃப், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்று ஒரு விளக்கம் அளித்தார். ஜல்லிக்கட்டு குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தபோது கூறியதாவது:
நண்பர்கள் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றி அறிந்துள்ளேன். அவர்கள் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாசாரம் என்று என்னிடம் கூறியுள்ளார்கள். எனவே ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். மக்களின் ஆர்வம் கண்டு வியப்படைகிறேன். மனத்துக்கு நெருக்கமாக உள்ள விஷயங்கள் குறித்துப் போராட மக்களுக்கு உரிமை உண்டு. இது அமைதியான போராட்டமாக அமையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.