/

இந்தியா அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்ஸில் போராடும் இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்கப் போராடி வருகிறது... 

News image
Updated On :27 ஜூலை 2017, 12:17 pm

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்கப் போராடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கையின் காலே நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா அறிமுக வீரராக களமிறங்கினார். இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 168 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். புஜாரா 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 144, ரஹானே 94 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் இன்று 257 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் புஜாரா. தவன் தவறவிட்ட இரட்டைச் சதத்தை புஜாரா எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதீப் பந்துவீச்சில் 153 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவும் 57 ரன்களில் வெளியேறினார். 

தனது 50-வது டெஸ்ட் போட்டியை விளையாடும் அஸ்வின் வேகமாக ரன்கள் குவித்தார். ஆனால், 47 ரன்களில் பிரதீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட சாஹா, ஹராத் பந்துவீச்சில் 16 ரன்களில் வீழ்ந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்துள்ளது. 

பிறகு, 15 ரன்களில் ஜடேஜா வெளியேறினார். இதனால் இந்திய அணி 600 ரன்களை எடுப்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த பாண்டியா - சமி இலங்கையின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார்கள். எதிர்பாராதவிதமாக சமி 3 சிக்ஸர்கள் அடித்து இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். பாண்டியாவும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.

பாண்டியா - சமி இணைந்து 62 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குக் கடைசிக்கட்டத்தில் மிகவும் உதவினார்கள். சமி 30 ரன்களில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவும் பாண்டியாவும் 21 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியா 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். இந்திய அணி 600 ரன்களை எட்டியபிறகு பாண்டியாவும் வீழ்ந்தார். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 133.1 ஓவர்களில் 600 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிகவும் கடினமான இலக்கை விரட்டவேண்டிய நெருக்கடியில் பேட்டிங் செய்ய வந்தார்கள் இலங்கையின் தொடக்க வீரர்கள். திமுத் கருணாரத்னே 2 ரன்களில் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. தரங்கா 24, குணதிலகா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. குணதிலகா ஷமியின் பந்துவீச்சில் 16 ரன்களில் வீழ்ந்தார். அதே ஓவரில் குஷல் மெண்டிஸ்  ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் என்கிற மோசமான நிலைமையில் இருந்தது. அதன்பிறகு உபுல் தரங்காவும் மேத்யூஸும் கவனமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறியபோதும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் இருந்தார்கள். ஆனால் இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முகுந்தின் அருமையான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆனார். தரங்கா 64 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக, டிக்வெல்லா முகுந்த்தின் அற்புதமான கேட்சில் அஸ்வின் பந்துவீச்சில் 8 ரன்களில் வெளியேறினார். 

2-ம் நாளின் முடிவில் இலங்கை அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க இலங்கை அணி மேலும் 247 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.