பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா.
அவ்வப்போது மழை மிரட்டியபோதும், இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பதம்பார்க்க தவறவில்லை. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 91, ஷிகர் தவன் 68, கேப்டன் கோலி 81*, யுவராஜ் சிங் 53 ரன்கள் குவித்தனர்.
எட்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக லண்டன் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய அணி உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியதால், அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
மழை: இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியாவின் இன்னிங்ûஸ ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் தொடங்கினர். இந்த ஜோடி நிதானமாக ரன் சேர்க்க, இந்திய அணி 9.5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
முதல் விக்கெட்டுக்கு 136: இதையடுத்து ஆட்டம் 48 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, ஷதாப் கான் வீசிய 19-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 71 பந்துகளில் அரை சதம் கண்டார்.
வஹாப் ரியாஸ் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய ஷிகர் தவன், 48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் இந்தியா 20 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இந்திய அணி 24.3 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்திருந்தபோது தவனின் விக்கெட்டை இழந்தது. அவர் 65 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஷதாப் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் மழை: இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்திய அணி 33.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட, ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவர் 119 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் குவித்தார்.
யுவராஜ் அதிரடி: இதையடுத்து கோலியுடன் இணைந்தார் யுவராஜ் சிங். 8 ரன்களில் இருந்தபோது ஹசன் அலி கோட்டைவிட்ட கேட்ச்சால் வாழ்வு பெற்ற யுவராஜ் சிங், பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார். அவர் தொடர்ச்சியாக பவுண்டரிகளை பறக்கவிட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
43 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய கோலி, ஹசன் அலி பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 58 பந்துகளில் அரை சதம் கண்டார். வஹாப் ரியாஸ் வீசிய 46-ஆவது ஓவரில் கோலி தொடர்ச்சியாக இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்ட, அதே ஓவரில் யுவராஜ் சிங் ஒரு பவுண்டரியை விரட்டி 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இந்தியா 46.2 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்திருந்தபோது யுவராஜ் சிங்கின் விக்கெட்டை இழந்தது. அவர் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார்.
ஹாட்ரிக் சிக்ஸர்: இதையடுத்து களம்புகுந்த ஹார்திக் பாண்டியா, இமாத் வாசிம் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாச, இந்தியா 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. கோலி 68 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 81, பாண்டியா 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் தோல்வி: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, அகமது ஷெஸாத் 12 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு பாபர் ஆஸம் 8 ரன்களிலும், அசார் அலி 50 ரன்களிலும் (65 பந்துகள்) ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்தவர்களில் முகமது ஹபீஸ் மட்டுமே 33 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேற, 33.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான். வஹாப் ரியாஸ் மட்டும் காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். யுவராஜ் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
துளிகள்...
72
கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது.
3
ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 3-ஆவது முறையாகும்.
91
இந்த ஆட்டத்தில் 91 ரன்கள் குவித்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார் ரோஹித் சர்மா. முன்னதாக 68 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோஹித், 5 அரை சதங்களை விளாசியுள்ளார்.
உபுல் தரங்காவுக்கு 2 ஆட்டங்களில் தடை
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச இலங்கை அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், அந்த அணியின் கேப்டன் உபுல் தரங்கா இரு ஆட்டங்களில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் அனைத்து வீரர்களுக்கும் அவர்களுடைய போட்டி ஊதியத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 96 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்தது. இதில் இலங்கை அணிக்கு பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில், அந்த அணி 4 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா-வங்கதேசம் இன்று மோதல்
லண்டனில் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. அதேநேரத்தில் வங்கதேச அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் 305 ரன்கள் குவித்ததால் மிகுந்த நம்பிக்கையோடு ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
போட்டி நேரம்: மாலை 6
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
லண்டனில் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பு அதிகரிப்பு
லண்டனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வீரர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி மேலும் கூறியிருப்பதாவது: பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வீரர்கள், போட்டி அலுவலர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...