சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் ஜோஸ் பட்லர். சிக்ஸரை விளாசுகிறார் பென் ஸ்டோக்ஸ்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் ஜோஸ் பட்லர். சிக்ஸரை விளாசுகிறார் பென் ஸ்டோக்ஸ்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்த அணியில் ஜோ ரூட் 64, ஜோஸ் பட்லர் 61*, அலெக்ஸ் ஹேல்ஸ் 56 ரன்கள் எடுத்தனர்.
கார்டிஃப் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து அலெக்ஸ் ஹேல்ஸýடன் இணைந்தார் ஜோ ரூட். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இங்கிலாந்தின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு அதிரடியில் இறங்கிய ஜோ ரூட், சேன்ட்னர் வீசிய 18-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார்.
இதனிடையே அலெக்ஸ் ஹேல்ஸ் 60 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 20-ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இங்கிலாந்து. அந்த அணி 118 ரன்களை எட்டியபோது அலெக்ஸ் ஹேல்ஸின் விக்கெட்டை இழந்தது. மில்னே பந்துவீச்சில் சிக்ஸரை விளாசிய கையோடு ஸ்டெம்பை பறிகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ். அவர் 62 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் 13 ரன்களில் நடையைக் கட்ட, பென் ஸ்டோக்ஸ் களம்புகுந்தார். இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 52 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு ஸ்டோக்ஸ் சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விளாச, ஆட்டம் சூடுபிடித்தது.
இங்கிலாந்து அணி 188 ரன்களை எட்டியபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டு ஆனார் ஜோ ரூட். அவர் 65 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து ஜோஸ் பட்லர் களமிறங்க, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 53 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஜோஸ் பட்லர் ஒருபுறம் அதிரடியாக ரன் சேர்க்க, மறுமுனையில் மொயீன் அலி, ஆதில் ரஷித் ஆகியோர் தலா 12 ரன்களில் வெளியேறினர்.
இதையடுத்து ஜோஸ் பட்லருடன் இணைந்தார் லியாம் பிளங்கெட். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர், மில்னே பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 41 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் இங்கிலாந்து அணி 300 ரன் களைக் கடந்தது.
இதன்பிறகு பிளங்கெட் 15 ரன்களில் (10 பந்துகளில்) ஆட்டமிழக்க, பின்னர் வந்த மார்க் உட், ஜேக் பால் ஆகியோர் டக் அவுட் ஆயினர். இறுதியில் 49.3 ஓவர்களில் 310 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து. ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூஸிலாந்து தோல்வி: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் லுக் ரோஞ்சி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே, ஜேக் பால் வீசிய முதல் ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து மார்ட்டின் கப்டிலுடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. கப்டில் 33 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ராஸ் டெய்லர் களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 66 பந்துகளில் அரை சதம் கண்டார்.
அந்த அணி 30.2 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சன் விக்கெட்டை இழந்தது. அவர் 98 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார்.
அவரைத் தொடர்ந்து ராஸ் டெய்லர் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேக் பால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணி சரிவுக்குள்ளானது. பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு சுருண்டது நியூஸிலாந்து.
இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட் 4 விக்கெட்டுகளையும், ஜேக் பால், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜேக் பால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நியூஸிலாந்துக்கு வாய்ப்பு எப்படி?

"ஏ' பிரிவைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணி அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. ஆஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், வங்கதேசம், நியூஸிலாந்து ஆகியவை தலா 1 புள்ளியுடன் முறையே 3 மற்றும் 4-ஆவது இடங்களிலும் உள்ளன. நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அதேநேரத்தில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com