

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை.
ஷிகர் தவன் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தபோதும், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. அதில் வென்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.
லண்டன் ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தேர்வு செய்ய, ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் நிதானம் காட்ட, 10 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. திசாரா பெரேரா வீசிய 20-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 58 பந்துகளில் அரை சதம் கண்ட ரோஹித் சர்மா, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை விரட்ட, ஆட்டம் சூடுபிடித்தது.
ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து ஷிகர் தவன் 69 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனிடையே தொடர்ந்து வேகமாக ரன் சேர்த்த ரோஹித் சர்மா, மலிங்கா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 79 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24.5 ஓவர்களில் 138 ரன்கள் குவித்தது. இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக, பின்னர் வந்த யுவராஜ் சிங் 18 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குணரத்னே பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
தவன் சதம்: இதையடுத்து களம்புகுந்த தோனி, சிக்ஸரை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தவன், பிரதீப் வீசிய 40-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி 112 பந்துகளில் சதத்தை எட்டினார். இது, ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 10-ஆவது சதமாகும். இதன்மூலம் அதிவேகமாக 10 சதங்கள் (77 இன்னிங்ஸ்) அடித்தவர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
தவனும், தோனியும் அசத்தலாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்தியா 44.1 ஓவர்களில் 261 ரன்கள் எடுத்திருந்தபோது தவனின் விக்கெட்டை இழந்தது. அவர் 128 பந்துகளில் 125 ரன்கள் குவித்து மலிங்கா பந்துவீச்சில் மென்டிஸிடம் கேட்ச் ஆனார்.
தோனி அதிரடி: இதையடுத்து வந்த ஹார்திக் பாண்டியா, லக்மல் பந்துவீச்சில் பிரமாண்ட சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேதார் ஜாதவ் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய தோனி, 46 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய தோனி 52 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது இந்தியா.
கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 25 ரன்களுடனும், ஜடேஜா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை வெற்றி: பின்னர் ஆடிய இலங்கை அணியில் டிக்வெல்லா 7 ரன்களில் ஆட்டமிழக்க, குணதிலகாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். அதிரடியாக ஆடிய குணதிலகா 47 பந்துகளில் அரை சதமடிக்க, ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 65 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் மென்டிஸ்.
பாண்டியா பந்துவீச்சில் மென்டிஸ் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, 26-ஆவது ஓவரில் 150 ரன்களைக் கடந்தது இலங்கை. அந்த அணி 27.5 ஓவர்களில் 170 ரன்களை எடுத்திருந்தபோது குணதிலகா ரன் அவுட்டானார். அவர் 72 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்தார். இதையடுத்து குஷல் பெரேரா களமிறங்க, மென்டிஸ் 93 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார்.
இதன்பிறகு கேப்டன் மேத்யூஸ் களமிறங்க, குஷல் பெரேரா 44 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து மேத்யூஸýடன் இணைந்தார் குணரத்னே. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இலங்கை அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. மேத்யூஸ் 45 பந்துகளில் 52, குணரத்னே 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் எடுத்தார். குஷல் மென்டிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வாழ்வா, சாவா ஆட்டம்: நியூஸி.-வங்கதேசம் இன்று மோதல்
கார்டிஃப், ஜூன் 8: கார்டிஃப்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தும், வங்கதேசமும் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடி தலா ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளன. எனவே இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும். இதில் வெல்லும் அணியின் அரையிறுதி வாய்ப்பு, ஆஸ்திரேலியாவின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே அமையும்.
போட்டி நேரம்: பிற்பகல் 3
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ஸ்கோர் போர்டு
இந்தியா
ரோஹித் சர்மா (சி) டி.பெரேரா (பி) மலிங்கா 78 79
ஷிகர் தவன் (சி) மென்டிஸ் (பி) மலிங்கா 125 128
விராட் கோலி (சி) டிக்வெல்லா (பி) பிரதீப் 0 5
யுவராஜ் சிங் (பி) குணரத்னே 7 18
எம்.எஸ்.தோனி (சி) சன்டிமல் (பி) டி.பெரேரா 63 52
ஹார்திக் பாண்டியா (சி) கே.பெரேரா (பி) லக்மல் 9 5
கேதார் ஜாதவ் நாட் அவுட் 25 13
ரவீந்திர ஜடேஜா நாட் அவுட் 0 0
உதிரிகள் 14
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 321
விக்கெட் வீழ்ச்சி: 1-138 (ரோஹித்), 2-139 (கோலி),
3-179 (யுவராஜ்), 4-261 (தவன்), 5-278 (பாண்டியா), 6-307 (தோனி)
பந்து வீச்சு
லசித் மலிங்கா 10-0-70-2
சுரங்கா லக்மல் 10-1-72-1
நுவான் பிரதீப் 10-0-73-1
திசாரா பெரேரா 9-0-54-1
தனுஷ்கா குணதிலகா 8-0-41-0
அசேல குணரத்னே 3-0-7-1
இலங்கை
டிக்வெல்லா (சி) ஜடேஜா (பி) குமார் 7 18
குணதிலகா ரன் அவுட் (உமேஷ்/தோனி) 76 72
குஷல் மென்டிஸ் ரன் அவுட் (குமார்) 89 93
குஷல் பெரேரா ரிட்டையர்டு ஹர்ட் 47 44
மேத்யூஸ் நாட் அவுட் 52 45
குணரத்னே நாட் அவுட் 34 21
உதிரிகள் 17
மொத்தம் (48.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 322
விக்கெட் வீழ்ச்சி: 1-11 (டிக்வெல்லா), 2-170 (குணதிலகா),
3-196 (மென்டிஸ்), 3-271 (பெரேரா, ரிட்டையர்டு நாட் அவுட்).
பந்து வீச்சு
புவனேஸ்வர் குமார் 10-0-54-1
உமேஷ் யாதவ் 9.4-0-67-0
ஜஸ்பிரித் பூம்ரா 10-0-52-0
ஹார்திக் பாண்டியா 7-1-51-0
ரவீந்திர ஜடேஜா 6-0-52-0
கேதார் ஜாதவ் 3-0-18-0
விராட் கோலி 3-0-17-0
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.