ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சாம்பியன்ஸ் டிராபி: நியூஸிலாந்தை வெளியேற்றியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது வங்கதேசம்.

News image
Updated On :10 ஜூன் 2017, 4:41 am

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது வங்கதேசம்.

அந்த அணியின் ஷகிப் அல்ஹசன் (114)-மகமதுல்லா (102*) ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தது. இதுதான் வங்கதேச ஜோடி ஒன்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும்கூட.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோற்கும்பட்சத்தில் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறும். அதேநேரத்தில் வங்கதேசத்திடம் தோற்ற நியூஸிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

வில்லியம்சன் அரை சதம்: கார்டிஃப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம், ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததன் காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் லுக் ரோஞ்சி-மார்ட்டின் கப்டில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது.

லுக் ரோஞ்சி 16 ரன்கள் சேர்த்த நிலையில் தஸ்கின் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மார்ட்டின் கப்டிலுடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 69 ரன்களை எட்டியபோது கப்டில் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து கேன் வில்லியம்சனுடன் இணைந்தார் ராஸ் டெய்லர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 18 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இதன்பிறகு 58 பந்துகளில் அரை சதம் கண்டார் வில்லியம்சன்.

நியூஸிலாந்து அணி 30 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சனின் விக்கெட்டை இழந்தது. அவர் 69 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது.

நியூஸிலாந்து 265: இதையடுத்து நீல் புரூம் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய டெய்லர் 67 பந்துகளில் அரை சதமடித்தார். அந்த அணி 38.4 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்திருந்தபோது டெய்லரின் விக்கெட்டை இழந்தது. அவர் 82 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார்.

இதன்பிறகு அந்த அணி சரிவுக்குள்ளானது. நீல் புரூம் 36, கோரே ஆண்டர்சன் 0, ஜேம்ஸ் நீஷம் 23, ஆடம் மில்னே 7 ரன்களில் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்தது.

அல்ஹசன் சதம்: 266 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணியில் தமிம் இக்பால் 0, சபிர் ரஹ்மான் 3, செளம்ய சர்க்கார் 8, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 14 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 11.4 ஓவர்களில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.

இதையடுத்து ஷகிப் அல்ஹசனுடன் இணைந்தார் மகமதுல்லா. இந்த ஜோடி அசத்தலாக ஆட, வங்கதேசம் சரிவிலிருந்து மீண்டது. அல்ஹசன் 62 பந்துகளிலும், மகமதுல்லா 58 பந்துகளிலும் அரை சதமடிக்க, 41-ஆவது ஓவரில் 200 ரன்களை எட்டியது வங்கதேசம்.

தொடர்ந்து அசத்தலாக ஆடிய அல்ஹசன், ஆடம் மில்னே பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 111 பந்துகளில் சதத்தை எட்டினார். அதைத் தொடர்ந்து போல்ட் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசிய கையோடு போல்டு ஆனார் அல்ஹசன். அவர் 115 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் குவித்தார்.

மகமதுல்லா சதம்: இதையடுத்து மொஸாதீக் ஹுசைன் களமிறங்க, போல்ட் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 107 பந்துகளில் சதம் கண்டார் மகமதுல்லா. இறுதியில் 47.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் குவித்து வெற்றி கண்டது வங்கதேசம். மகமதுல்லா 107 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102, மொஸாதீக் ஹுசைன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அல்ஹசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.