சாம்பியன்ஸ் டிராபி:  வங்கதேச அணி 264 ரன்கள் குவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 264 ரன்கள் எடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி:  வங்கதேச அணி 264 ரன்கள் குவிப்பு!
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 264 ரன்கள் எடுத்துள்ளது. 

எக்பாஸ்டனில் இன்று நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் வங்கதேச அணி கடினமான பிரிவில் இடம்பெற்றிருந்தபோதிலும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியையும் தோற்கடித்துள்ளது. கணிக்க முடியாத வகையில் விளையாடி வரும் அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமானால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய வரலாறாக அமையும்.

டாஸ் வென்ற அணி இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க முதல் அதிரடியாக ஆட விரும்பினார்கள் வங்கதேச வீரர்கள். இதனால் முதல் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. செளம்ய சர்க்கார், சபீர் ரஹ்மானின் விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். இதன்பின்னர் தமிம் இக்பாலும் முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கோலியின் திட்டங்களை அழகாகக் கையாண்டார்கள். இதனால் ரன்கள் வேகமாகக் கிடைத்தன. தமிம் இக்பால் 62 பந்துகளிலும் முஷ்பிகுர் ரஹிம் 61 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 

இதனிடையே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் கெதர் ஜாதவ். தனது 2-வது ஓவரில் தமிம் இக்பாலை 70 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் ஜாதவ். இதன்பின்னர் நல்ல தொடக்கத்துடன் ஆடிவந்த ஷகிப் அல்ஹசனை 15 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் நன்கு ஆடிவந்த முஷ்பிகுர் ரஹிம் 61 ரன்களில் ஜாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால் 2 விக்கெட் இழப்புக்கு 154 என்கிற வலுவான நிலையில் இருந்த வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் என்கிற நிலைமைக்குச் சென்றது. இதன்பின்னர் மொஸாதீக் ஹுசைன் 15 ரன்களில் பூம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்த வங்கதேச அணி கடைசி 7 ஓவர்களில் 60 ரன்களாவது எடுக்க எண்ணியது. ஆனால் புவனேஸ்வர், பூம்ரா ஆகிய இருவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். கடைசி ஓவர்களில் ரன்கள் குவித்து அணிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மகமதுல்லா 21 ரன்களில் பூம்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார்.

புவனேஸ்வர் குமார் வீசிய 48-வது ஓவரில் ரன்கள் எடுக்கத் திணறிய தஸ்கின் அஹமது 5 பந்துகளை வீணடித்து கடைசிப் பந்தில் பேட்டின் முனையில் பந்து பட்டதால் பவுண்டரி அடித்தார். மஷ்ரபே மோர்ட்டஸா கடைசி ஓவர்களில் பவுண்டரிகள் அடித்து வங்கதேச அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. மஷ்ரபே மோர்ட்டஸா 30, தஸ்கின் அஹமது 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், பூம்ரா, ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com