சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்: உன்னால் மட்டுமே முடியும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட்டே கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலுக்கு நிகராகப் பயங்கரக் குழப்பத்தில் இருந்தது... 
சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்: உன்னால் மட்டுமே முடியும் பாகிஸ்தான்!

குரூப் சுற்றில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க இந்த இறுதி ஆட்டம் பொன்னான வாய்ப்பாகும். குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றது நமக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தந்தது. எனவே நமது பெருமையை மீட்க இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது டாஸ் வென்றால், இந்தியாவை பேட் செய்ய அழைக்கக் கூடாது. இந்திய அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை குவித்துவிட்டால், அதனால் நமக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். 

- சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் கான். 

நிச்சயம் அவர் சொன்னதுபோல இந்திய அணி முதலில் விளையாடியிருந்தால் அது பலன் அளித்திருக்கலாம். பாகிஸ்தானை நிலைகுலைய வைத்திருக்கலாம். அதேசமயம், காலை வேளையில் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த சமயத்தில் முகமது அமீர் இன்னும் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியைத் தடுமாற வைத்திருக்கலாம். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இந்திய அணி விளையாடியது பாகிஸ்தானுக்கு எதிராக. அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து இறுதியில் கோப்பையை வென்ற பாகிஸ்தானிடம். அதனால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.  

உண்மையில் பாகிஸ்தான் இடத்தில் வேறொரு அணி இருந்திருந்தால் முதல் சுற்றிலெயே வெளியேறியிருக்கும். 1992 உலகக்கோப்பைப் போட்டியில் நடந்ததை இன்னொருமுறை கண்டதுபோல அத்தனை சவால்களையும் வென்ற வெற்றி இது. பாகிஸ்தான் கிரிக்கெட் சரித்திரத்தில் என்றென்றும் பேசப்படும் வெற்றி. 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்ற 8 அணிகளில் தரவரிசையில் கடைசி இடத்தில் இருந்த அணி - பாகிஸ்தான். அதாவது அந்த அணி இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்ற அடுத்த வாரத்தில் அது 9-வது இடத்துக்குக் கீழிறங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இதற்காகவே ரத்து செய்தது. கொஞ்சம் விட்டிருந்தால் வெளியே நின்றுதான் வேடிக்கைப் பார்த்திருக்கவேண்டும். ஆனால் இத்தனையும் தாண்டிய பிறகுதான் கோப்பையை வெல்லமுடியும் என்று எழுதப்பட்டிருந்தால் அந்த வரிசையை யார் மாற்றமுடியும்?

சிலசமயம் புள்ளிவிவரங்கள் மிகச்சரியாக நடக்கப்போவதைக் கணிக்கும். சிலசமயம் அப்படியே தலைகீழாகவே நடக்கும். ஆனால் நேற்று நடந்தது அத்தனை கணிப்புகளையும் தாண்டிய வெற்றி.

சாம்பியன் டிராபி போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் கடைசி 3 இறுதி ஆட்டங்கள்

2014: ஆசியா கோப்பை v இலங்கை - தோல்வி 
2012 ஆசியா கோப்பை v வங்கதேசம் - வெற்றி 
2008: கிட்ப்ளை கோப்பை v இந்தியா - வெற்றி 

இந்தியாவின் கடைசி 3 இறுதி ஆட்டங்கள்

2013: முத்தரப்புப் போட்டி v இலங்கை - வெற்றி 
2013: சாம்பியன்ஸ் டிராபி v இங்கிலாந்து - வெற்றி 
2011: உலகக் கோப்பை v இலங்கை - வெற்றி 

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டங்களில்

விளையாடியது - 10
இந்தியா - 3
பாகிஸ்தான் - 7

ஐசிசி ஒருநாள் போட்டியின் இறுதிச்சுற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் முதல்முறையாக முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான். ஜெயிப்போமா மாட்டோமா என்கிற பயம் நிச்சயம் இருந்திருக்கும் அல்லவா! 

இப்படிப் பெரும்பாலான புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்குச் சாதகமாகவே இருந்தன.

ஆனால் அந்த அணிக்குப் பெரிய உந்துசக்தியாக இருந்தது 1992 உலகக்கோப்பைப் போட்டி. அதிலும் இப்படித்தான். போட்டியிலிருந்து வெளியேறுகிற நிலைமையில் இருந்து பிறகு அட்டகாசமாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றியது இம்ரான் கானின் பாகிஸ்தான் அணி.  

பாகிஸ்தான் 

1992 - தோல்வி, வெற்றி, முடிவு இல்லை, தோல்வி, தோல்வி, வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி - கோப்பையை வென்றது.
2017 சாம்பியன்ஸ் டிராபி - தோல்வி, வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி - கோப்பையை வென்றது. 

புள்ளிவிவரங்களை விடுங்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டே கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலுக்கு நிகராகப் பயங்கரக் குழப்பத்தில் இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி ஆரம்பிக்கப்பட்டபிறகும் அதன் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றபிறகு கிட்டத்தட்ட பதுங்குக்குழியில் ஒளிந்துகொள்ளும் நிலைமையில் இருந்தது பாகிஸ்தான் அணி. கிட்டத்தட்ட பாகிஸ்தான் மக்கள் அனைவரும் கேப்டனை வசை பாடினார்கள். முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வெகுண்டெழுந்தார்கள். மீம்ஸ்கள் பறந்தன. போட்டியை விட்டு பாதியிலேயே ஓடியிருந்தால்கூட ஏன் என்று கேட்டிருக்க ஆள் இருக்காது.

ஆனால் ஒரு விளையாட்டு வீரனின் அழகே நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து சாதித்துக்காட்டுவதுதானே. அதுவும் பாகிஸ்தானுக்கு இது புதிதும் அல்ல. எப்போது 1992 உலகக்கோப்பைப் போட்டியை ஒருமுறை அலசினாலும் நரம்பு முறுக்கேறும். அதைவிட ஓர் அணி நெருக்கடியைச் சந்தித்துவிடமுடியாது. அதளபாதாளத்திலிருந்து எழுந்து கோப்பையை வென்றுவிடவும் முடியாது. மேலும் பாகிஸ்தான் அணியில் திறமைக்கு எப்போதும் பஞ்சமில்லை. அவர்களைச் சரியாக ஒருங்கிணைத்துவிட்டால் பிறகு எந்த எதிரணியாலும் அதன் கர்ஜனையைச் சமாளிக்கமுடியாது. அதைத்தான் செய்தார்கள் சர்ஃப்ராஸும் மிக்கி ஆர்தர் உள்ளிட்ட பயிற்சியாளர்களும். 

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அஹமது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர், பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். ஒரு பெரிய போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அணியின் கேப்டனே மாறினால் அணியின் கதி என்னவாகும்? வேறொரு அணியாக இருந்திருந்தால் பீஸ் பீஸாகியிருக்கும். ஆனால் பாகிஸ்தானுக்கு இதுபோன்ற மாற்றங்கள் கைகொடுக்கவே செய்தன. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு முகவருடன் தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து அந்நாட்டு வீரர்கள் ஷர்ஜீல் கான், காலித் லத்தீஃப், வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். முகமது இர்ஃபான் ஓர் ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றும் பாக். ரசிகர்களுக்குக் காத்திருந்தது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேனான உமர் அக்மல் அணியிலிருந்து நீக்கப்பட்டார். உடற்தகுதி சோதனையின்போது இருமுறை தோல்வியடைந்ததால் அவர், இங்கிலாந்துக்குச் சென்றும் மேற்கூறிய காரணத்தால் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.  அதாவது பாகிஸ்தான் அணியில் கட்டாயம் இடம்பிடிக்கக்கூடிய வீரர்களான உமர் அக்மல், ஷர்ஜீல் கான், முகமது இர்பான் ஆகியோர் அணியில் இல்லை. இந்திய அணியில் ரோஹித் சர்மா, யுவ்ராஜ் சிங், பூம்ரா இல்லாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? (என்னது நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறீர்களா? :-)) 

பாகிஸ்தான் அணியா கலங்கும்? பதிலுக்கு மூன்று புதுமுகங்களைக் களமிறக்கியது. இதில் முக்கியமான ஒன்று, இந்தப் போட்டியில் ஒவ்வொரு ஆட்டமும் கிட்டத்தட்ட நாக் அவுட் என்பதால் வேறெந்த அணியும் புதுமுக வீரரைக் களமிறக்கவில்லை. ஆனால் நெருக்கடியாலும் இதர வீரர்களின் தவறுகளாலும் மூன்று புதிய வீரர்களை மினி உலகக்கோப்பை என்று சொல்லப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறக்கவேண்டிய சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த ஒரு அம்சமே பாகிஸ்தான் அணியின் துணிச்சலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஒருவர் விலகினால் அவர் இடத்தை இன்னும் சிறப்பாகப் பூர்த்தி செய்ய திறமைசாலிகள் அந்த அணியில் இருந்தார்கள்.   

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வாகை சூடியபோது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 9 பேர் இந்த முறையும் அணியில் இடம்பெற்றார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் அப்படியே தலைகீழ். மூன்று புதுமுக வீரர்கள், சதாப் கான் என்கிற 18 வயது லெக் ஸ்பின்னர். அதேபோல தொடர் நாயகன் விருதைப் பெற்ற ஹசன் அலி கடந்த ஒருவருடத்துக்கு முன்பு பாகிஸ்தா அணியிலேயே இல்லை. 

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு நிகரான விடாமுயற்சியுடன் விளையாடும் இன்னொரு அணியைப் பார்க்கவேமுடியாது. அது சாம்பியன்ஸ் டிராபியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகத் தோற்றவுடன் மீதமுள்ள ஐந்து போட்டிகளையும் வென்றால்தான் கோப்பை என்கிற நிலைமையை எவ்வளவு அழகாகத் தாண்டியிருக்கிறது. புதிய கேப்டன், புத்தம் புது இளம் வீரர்கள். இந்தக் கூட்டணி இறுதிச்சுற்றில் இந்திய அணியை நொறுக்கித்தள்ளும் என்று எத்தனை பேர் கணித்திருக்க முடியும்?  

பாகிஸ்தான் அணி போல இந்திய அணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. புதிய வீரர்கள் என யாரும் இல்லை. சமீபத்தில் அணியில் இடம்பெற்ற கெதர் ஜாதவும் தன் திறமையை முந்தைய தொடர்களில் நிரூபித்தவர்தான். மற்றபடி போட்டியில் விளையாடிய அத்தனை வீரர்களும் பழுத்த அனுபவசாலிகள். பல்வேறு சூழல்களைச் சந்தித்து அனுபவம் பெற்றவர்கள். 

முதல் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியவர்கள் அஹமத் ஷெஷாத்தும் அசார் அலியும். ஆனால் தோல்விக்குப் பிறகு அஹமத் ஷெஷத் நீக்கப்பட்டார். அவர் இடத்தைப் பிடித்தவர்தான் 27 வயது ஃபகார் ஸமான். நேற்றைய போட்டியில், இந்தியாவுக்கு எதிராகச் சதமடித்தவர்! ஆம். அவருடைய முதல் போட்டியே சாம்பியன்ஸ் டிராபிதான். இறுதிப் போட்டியில் சதமடித்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுவிட்டார். இந்த அதிசயங்களையெல்லாம் பாகிஸ்தானில் மட்டுமே காணமுடியும்.  

அஹமத் ஷெஷாத் வேண்டாம், அதற்குப் பதிலாக ஃபகார் ஸமானைத் தேர்வு செய்யலாம் என்கிற ஒரு சரியான முடிவு பாகிஸ்தான் அணியின் போக்கையே மாற்றிவிட்டது. பொதுவாக பாகிஸ்தான் அணிக்குப் பலவீனமாக இருப்பது பேட்டிங்தான். ஆனால், ஸமான் வந்தபிறகு பாகிஸ்தானின் பேட்டிங் களை கட்டியது. ஸமானின் அதிரடி ஆட்டம் பாகிஸ்தான் அணிக்குப் புது ரத்தத்தைப் பாய்ச்சியது. 31, 50, 57, 114 என கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் திறமையை நிரூபித்து அணியை அடுத்தக்கடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றார் ஸமான். இதனால் தங்களுடைய உழைப்பு வீண்போகாது என்று பந்துவீச்சாளர்களும் உணர்ந்து அவர்களும் தன்பங்குக்கு ரகளை செய்தார்கள். அதிலும் ஹசன் அலியின் பங்களிப்பு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். பாகிஸ்தானுக்காக ஆடிய ஒரே வருடத்தில் சாம்பியன் டிராபி போட்டியில் தொடர் நாயகன் விருது! இந்திய அணிக்கு இதுபோன்று சாகசங்கள் செய்யும் புதுமுகங்கள் கிடைக்குமா என்கிற ஏக்கத்தை வரவழைக்கும் சாதனைகள் இவை. 

ஸமான் இறுதிப் போட்டியில் விளையாடுவதாகவே இல்லை. அதற்கு முன்தினம் உடல்நலகுறைவால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். சனி இரவு முடிவு செய்துவிட்டார். நாளை விளையாடப்போவதில்லை. நம்மால் முடியாது. 

ஆனால் சரியான மருத்துவக் குழு ஸமானுக்கு ஒத்துழைப்பும் நம்பிக்கையும் அளித்து மீட்டுக்கொண்டுவந்துள்ளது. மருந்துகள் சாப்பிட்டு நன்குத் தூங்கிய ஸமான் அடுத்தநாள் நிம்மதியாகக் கண் விழித்தார். உடலில் புது உற்சாகம் தென்பட உடனே விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். பூம்ரா பந்துவீச்சில் நோ பாலில் விக்கெட்டைப் பறிகொடுத்தபிறகும் அதைத் தனக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பாக மாற்றிக்காட்டினார். இப்படி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் எங்குத் தொட்டாலும் கதை கதையாகக் கிடைக்கின்றன. எந்த ஒரு போட்டியிலும் சுமூகமான சூழலே இல்லை. ஒவ்வொரு அடியிலும் நெருக்கடியைச் சந்தித்தே மீண்டுவந்துள்ளது அந்த அணி. ஆரம்பத்தில் இந்திய அணியிடம் தோற்றதால் பாகிஸ்தான் இழந்தது 2 புள்ளிகள் மட்டும்தான். ஆனால் அப்போது தவறவிட்ட 2 புள்ளிகள்தான் கடைசியில் கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி மீண்டு வருவதும் மற்ற அணிகளுக்குச் சவாலாக விளங்குவதும் எப்போதும் சுவாரசியமும் பரபரப்பும் அளிக்கக்கூடியவை. அந்தப் பொன்னான தருணம் மீண்டும் உருவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com