சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பிசிசிஐக்கு நிர்வாகக் குழு உத்தரவு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை உடனடியாக அறிவிக்குமாறு பிசிசிஐக்கு உத்தரவி
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை உடனடியாக அறிவிக்குமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு.
துபையில் சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின்போது, பிசிசிஐக்கான வருவாய் பகிர்வு குறைக்கப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த பிசிசிஐ, இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியை புறக்கணிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்கு எதிராக முடிவெடுக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என பிசிசிஐயை கடந்த புதன்கிழமை நிர்வாகக் குழு எச்சரித்தது. ஆனாலும் பிசிசிஐ தனது பிடிவாதத்தை கைவிடவில்லை.
இதையடுத்து பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி மற்றும் நிர்வாகிகளுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது நிர்வாகக் குழு. அதில், 'சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் இந்திய அணியைச் சுற்றிலும் அதிகளவில் எதிர்மறையான கருத்துகள் எழுந்துள்ளன. அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிப்பதற்கான கடைசி நாள் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதுவரை அணியே தேர்வு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக தேர்வுக்குழுவை கூட்டி அணியை தேர்வு செய்யுங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com