

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மிகமுக்கியமான இப்போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த யுவ்ராஜ் சிங், காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தீபக் ஹூடா இடம்பெற்றுள்ளார். குஜராத் அணியில் பசில் தம்பி, தவல் குல்கர்ணிக்குப் பதிலாக பிரவீன் குமார், முனவ் படேல் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
குஜராத் தொடக்க வீரர்களான டுவைன் ஸ்மித்தும் இஷான் கிஷனும் அபாரமாக விளையாடினார்கள். 111 ரன்கள் வரை இருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஸ்மித்துக்கு அரை சதம் எடுக்க 31 பந்துகள் தேவைப்பட்டன. இருவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது 54 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்மித். பிறகு இஷான் கிஷனும் 61 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஹைதராபாத்தின் கை ஓங்கியது. குஜராத்தின் சரிவும் தொடங்கியது.
ரெய்னா, ஃபிஞ்ச் ஆகியோர் 2 ரன்களில் வெளியேற தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். பிறகு ஃபாக்னரும் 8 ரன்களில் வெளியேற தடுமாற ஆரம்பித்தது குஜராத் அணி.
கடைசியில் 19.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 10 விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு இழந்தது குஜராத்.முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
குஜராத் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் ஹைதராபாத் அணிக்கோ, இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, குஜராத்தை வீழ்த்தும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். மாறாக தோற்கும்பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புணே-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். அதில் பஞ்சாப் தோற்கும்பட்சத்தில், ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையெனில் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.