புரோ கபடி: மணீந்தர் சிங் அபாரம்; பெங்கால் "த்ரில்' வெற்றி
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 104-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.


5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 104-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெங்கால் அணி 31-30 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய சில விநாடிகளே இருந்த நிலையில், ரைடு சென்ற பெங்கால் வீரர் மணீந்தர் சிங்கை ஜெய்ப்பூர் வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். எனினும் அவர் போனஸ் புள்ளிக்கான எல்லையை ஏற்கெனவே தொட்டிருந்ததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்க, பெங்கால் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் அசத்தலாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற, பெங்கால் அணி தனது ரைடர் மணீந்தர் சிங்கின் மூலம் முதல் புள்ளியைப் பெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய பெங்கால் அணி 5-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் (3-3) செய்தது. இதன்பிறகு பெங்கால் அணி 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற, 10-ஆவது நிமிடத்தில் ஜெய்ப்பூர் வீரர் விக்னேஷ் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளைக் கைப்பற்றினார். இதனால் ஜெய்ப்பூர் அணி 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 12-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பெங்கால் ஆல்அவுட்: பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 23-ஆவது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ûஸ ஆல் அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி 18-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து ரைடு சென்ற மணீந்தர் சிங்கை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி 19-13 என்ற நிலையை எட்டியது.
பின்னர் தொடர்ச்சியாக 3 ரைடுகள் சென்ற மணீந்தர் சிங், 4 புள்ளிகளைக் கைப்பற்ற, பெங்கால் அணி சரிவிலிருந்து மீண்டது. தனது அபார ரைடின் மூலம் தொடர்ந்து புள்ளிகளைக் கைப்பற்றிய மணீந்தர் சிங், 34-ஆவது நிமிடத்தில் 10-ஆவது புள்ளியைக் கைப்பற்றி, சூப்பர்-10 அந்தஸ்தை பெற்றார். இதன்மூலம் ஸ்கோரும் சமநிலையை (22-22) எட்டியது.
இதன்பிறகு ஆல்அவுட்டாகும் நிலைக்கு தள்ளப்பட்ட ஜெய்ப்பூர் அணி, பவன் குமாரின் அபார ரைடால், தொடர்ச்சியாக தப்பித்ததோடு மட்டுமின்றி, முன்னிலையையும் தக்கவைத்துக் கொண்டது. இதனால் 37 -ஆவது நிமிடம் வரை ஜெய்ப்பூரின் கையே ஓங்கியிருந்தது. ஜெய்ப்பூர் அணியை ஆல்அவுட்டாவதிலிருந்து தொடர்ந்து காப்பாற்றிய பவன் குமார், 18-ஆவது நிமிடத்தில் பெங்கால் வீரர்களிடம் சிக்கினார். இதனால் அந்த அணி ஆல் அவுட்டானது. அப்போது பெங்கால் அணி 29-30 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இதையடுத்து ரைடு சென்ற தீபக் நர்வால் ஒரு புள்ளியை தட்டி வர, ஸ்கோர் சமநிலையை (30-30) எட்டியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி நிமிடத்தில் ரைடு சென்ற ஜெய்ப்பூர் வீரர் துஷார் பாட்டீலை வீழ்த்திய பெங்கால் அணி, 31-30 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிவடைய சில விநாடிகளே இருந்த நிலையில், ரைடு சென்ற பெங்கால் வீரர் மணீந்தர் சிங் நேரத்தைக் கழித்துவிட்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணிச்சலாக ஏறி ஆடிய அவர், போனஸ் புள்ளிக்கான எல்லையை தொட்டார். அப்போது ஜெய்ப்பூர் வீரர்கள் மணீந்தர் சிங்கை மடக்கிப் பிடித்தனர். எனினும் அவர் போனஸ் புள்ளிக்கான எல்லையை ஏற்கெனவே தொட்டிருந்ததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்க, பெங்கால் 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. பெங்கால் தரப்பில் 26 முறை ரைடு சென்ற மணீந்தர் சிங், 16 புள்ளிகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். அந்த அணியின் பின்கள வீரரான ரேன் சிங் தனக்கு கிடைத்த 7 வாய்ப்புகளில் 4 புள்ளிகளைக் கைப்பற்றினார். ஜெய்ப்பூர் தரப்பில் பவன்குமார் 13 புள்ளிகளைக் கைப்பற்றியபோதும், அவரால் தனது அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்கால் அணி 9-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணி 64 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் ஜெய்ப்பூர் அணி 15 ஆட்டங்களில் விளையாடி 7-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 44 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் 5-ஆவது இடத்தில் உள்ளது.
யு மும்பா வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி 33-30 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது.
இன்று விடுமுறை: திங்கள்கிழமை ஆட்டம் எதுவும் கிடையாது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லியும், குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸýம் மோதுகின்றன. 2-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுகு டைட்டன்ஸýம் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...