5-ஆவது சீசன் புரோ கபடி தொடரில் விளையாடி வரும் நட்சத்திர ரைடர்களில் ஒருவர் மணீந்தர் சிங். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தவரான மணீந்தர் சிங், முதல் சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக விளையாடினார்.
அந்த சீசனில் ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார் மணீந்தர் சிங். அப்போது 130 புள்ளிகளுடன் அதிக புள்ளிகளைக் கைப்பற்றிய ரைடர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஆனால் பின்னர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 3 சீசன்களில் காணாமல் போனார் மணீந்தர் சிங். இந்த நிலையில் 5-ஆவது சீசனில் மணீந்தர் சிங் பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கியபோது, அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே, பெங்கால் அணியின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். பெங்கால் அணி இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றிகளைப் பெற்று 64 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. மணீந்தர் சிங் இதுவரை தனது ரைடின் மூலம் 155 புள்ளிகளைக் கைப்பற்றியிருக்கிறார். இதன்மூலம் இந்த சீசனில் அதிக புள்ளிகளைக் கைப்பற்றிய ரைடர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் முடிவடைய சில விநாடிகளே இருந்த நிலையில், ரைடு சென்ற மணீந்தர் சிங் நேரத்தைக் கழித்துவிட்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணிச்சலாக ஏறி ஆடிய அவர், போனஸ் புள்ளிக்கான எல்லையை தொட்டார். அப்போது ஜெய்ப்பூர் வீரர்கள் மணீந்தர் சிங்கை மடக்கிப் பிடித்தனர். எனினும் அவர் போனஸ் புள்ளிக்கான எல்லையை ஏற்கெனவே தொட்டிருந்ததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்க, பெங்கால் அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் 'த்ரில்' வெற்றி கண்டது. இதில் 26 முறை ரைடு சென்ற மணீந்தர் சிங், 16 புள்ளிகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். ஆட்டம் முடிந்த பிறகு மணீந்தர் சிங், தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த பிறகு, அடுத்த 3 சீசன்களில் விளையாடவில்லை. கடினமான அந்த தருணத்தை எப்படி கடந்து வந்தீர்கள்?
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 3 சீசன்களில் விளையாட முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. எனினும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ச்சியாக பயிற்சியில் இருந்ததோடு, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். மீண்டும் புரோ கபடிக்கு திரும்பியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணிக்காக விளையாடிய நிலையில், இந்த சீசனிலும் ஜெய்ப்பூர் அணிக்காக களமிறங்க வேண்டும் என நினைத்தீர்களா?
எனது நெருங்கிய நண்பரும், மூத்த சகோதரர் போன்றவருமான ரேன் சிங் எந்த அணிக்காக விளையாடுகிறாரோ, அதே அணிக்காக நானும் களமிறங்க வேண்டும் என விரும்பினேன். எதிர்பார்த்ததைப் போலவே ரேன் சிங்குடன் இணைந்து பெங்கால் அணிக்காக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
பெங்கால் வாரியர்ஸ் அணியுடான உங்கள் பயணம் பற்றி...
மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அணியில் நல்ல சூழல் இருக்கிறது. வீரர்களை கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
இந்த சீசன் மிக நீண்டதாகும். அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன?
நீண்ட சீசனாக இருப்பதால் ஒரு ஆட்டத்துக்கும், மற்றொரு ஆட்டத்துக்கும் இடையே போதிய கால அவகாசம் கிடைக்கிறது. இதனால் சரியான கூட்டணியை அடையாளம் கண்டு, அணியை கட்டமைக்க முடிகிறது. அதேநேரத்தில் நீண்ட நாள்கள் உடற்தகுதியை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது மிகக் கடினமானதாகும்.
இந்த சீசனில் உங்களின் மறக்க முடியாத ஆட்டம்...
ஜெய்ப்பூர் அணியுடனான (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது) இந்த ஆட்டம்தான். கடைசிக் கட்டத்தில் அபாரமாக ஆடி 'த்ரில்' வெற்றி பெற்றதை ஒருபோதும் மறக்க முடியாது.
இந்த சீசனில் உங்களின் இலக்கு..
இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும், கோப்பையை வெல்ல வேண்டும்.
உங்களின் பொழுதுபோக்கு?
மோட்டார் சைக்கிள் மீது அலாதிபிரியம் உண்டு. அதுதான் என் பொழுதுபோக்கு. இப்போது ராயல் என்பீல்டு புல்லட்டில் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்.