நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புரோ கபடி: டெல்லியை பந்தாடியது குஜராத்

5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 106-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 42-22 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை தோற்கடித்தது.

News image
Updated On :3 அக்டோபர் 2017, 7:30 pm

ஏ.வி. பெருமாள்

5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 106-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 42-22 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை தோற்கடித்தது.
இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 11-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணி இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி 14-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. 
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணி ஆரம்பம் முதலே அபாரமாக ஆட, மறுமுனையில் அந்த அணியை சமாளிக்க முடியாமல் திணறியது டெல்லி. குஜராத் ரைடர் சந்திரன் ரஞ்சித் அட்டகாசமாக ஆட, அவரைப் பிடிக்க முடியாமல் டெல்லி பின்கள வீரர்கள் தடுமாறினர். 
தொடர்ந்து மிக லாவகமாக டெல்லி வீரர்களின் பிடியில் தப்பிய ரஞ்சித் புள்ளிகளைக் குவித்தார். இதனால் முதல் 7 நிமிடங்களில் 8-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது குஜராத். தொடர்ந்து அபாரமாக ஆடிய குஜராத், 8-ஆவது நிமிடத்தில் டெல்லியை ஆல்அவுட்டாக்கியது. இதன்மூலம் குஜராத் 12-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு சச்சினும், ரஞ்சித்தும் தொடர்ந்து புள்ளிகளைக் குவிக்க, 17-4 என்ற வலுவான முன்னிலையை எட்டியது குஜராத். அதேநேரத்தில் மறுமுனையில் தொடர்ந்து தடுமாறிய டெல்லி அணி, 17-ஆவது நிமிடத்தில் 2-ஆவது முறையாக ஆட்டமிழக்க, குஜராத் 23-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 3 நிமிடங்களில் மேலும் 4 புள்ளிகளைக் கைப்பற்றிய குஜராத், முதல் பாதி ஆட்டநேர முடிவில் 27-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் குஜராத்தின் ஆதிக்கமே தொடர்ந்தது. முதல் பாதி ஆட்டத்தில் ரஞ்சித்தை தொட முடியாமல் திணறிய டெல்லி வீரர்கள், 22-ஆவது நிமிடத்தில் அவரை முதல்முறையாக வீழ்த்தினர். 
சச்சினும், ரஞ்சித்தும் தங்கள் ரைடின் மூலம் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிக்க, 28-ஆவது நிமிடத்தில் குஜராத் 33-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதேநேரத்தில் மறுமுனையில் போராடிய டெல்லி ரைடர் அபோல்பாஸில், அந்த அணியை ஏறக்குறைய 3 முறை ஆல்அவுட்டாவதிலிருந்து காப்பாற்றினார். எனினும் 31-ஆவது நிமிடத்தில் மூன்றாவது முறையாக ஆட்டமிழந்தது டெல்லி. அப்போது குஜராத் அணி 38-15 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய குஜராத் அணி 42-22 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி கண்டது.
குஜராத் தரப்பில் சச்சின் 11 புள்ளிகளையும், ரஞ்சித் 9 புள்ளிகளையும் கைப்பற்றினர். அந்த அணியின் பின்கள வீரர் சுநீல்குமார் தனக்கு கிடைத்த 7 டேக்கிள் வாய்ப்புகளில் 6 புள்ளிகளைக் கைப்பற்றினார். டெல்லி தரப்பில் அபோல்பாஸில் 7 புள்ளிகளையும், ஸ்ரீராம் 6 புள்ளிகளையும் கைப்பற்றினர். எனினும் அதன் பின்களம் மோசமாக அமைந்ததால் படுதோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.
தெலுகு வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 37-58 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
இதன் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது தமிழ் தலைவாஸ்.
இன்றைய ஆட்டங்கள்
யு மும்பா-ஹரியாணா
நேரம்-இரவு 8
தமிழ் தலைவாஸ்-யு.பி.யோதா
நேரம் -இரவு 9
இடம்-சென்னை
நேரடி ஒளிபரப்பு-
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.