6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தடுமாறும் நியூஸி. அணி: இந்திய அணி அபார பந்துவீச்சு!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி தடுமாறி வருகிறது...

News image
Updated On :25 அக்டோபர் 2017, 11:05 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி தடுமாறி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் யாராலும் அரை சதம் எடுக்கமுடியாமல் போனது.

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புணேவில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.  

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பிடித்துள்ளார். நியூஸிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பலமான வெற்றிய பதிவு செய்த இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராகவும் அவ்வாறே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி ஃபார்மில் இருக்கும் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த நியூஸிலாந்திடம் வீழ்ந்துள்ளது. இதனால், 2-ஆவது ஆட்டத்தின் மூலம் மீண்டு வந்து சொந்த மண்ணில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில், 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து களம் காண்கிறது.

பிட்ச் வடிவமைப்பாளர் சர்ச்சையால் பரபரப்பான முறையில் தொடங்கிய இப்போட்டியில் மூன்றாவது ஓவரில் மார்டின் கப்டில் விக்கெட்டை (11 ரன்கள்) வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். இதன்பிறகு வில்லியம்சன், 3 ரன்களில் பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். காலின் மன்ரோ 10 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது. பின்னர் வந்த ராஸ் டெய்லரும் 21 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முந்தையை ஆட்டங்களில் பந்துவீச வாய்ப்பில்லாமல் இருந்த கெதர் ஜாதவ், இந்தமுறை 11-வது ஓவரிலிருந்தே பந்துவீச அழைக்கப்பட்டார். அவரும் சிறப்பாகப் பந்துவீசியதால் நியூஸிலாந்து அணியால் ரன் குவிக்க முடியாமல் போனது. 20 ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. நீண்டநேரமாக இந்திய அணிக்குச் சவாலாக விளங்கிய டாம் லதாம், 62 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

முக்கியமான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும் ஹென்றி நிகோலஸ், இந்தியப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். எனினும் அவரால் அரை சதம் எடுக்கமுடியாமல் போனது. 42 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். 40 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 

44-வது ஓவரை வீசிய சாஹல், அடுத்தடுத்த பந்துகளில் கிரான்ட்ஹோம் (41 ரன்கள்), ஆடம் மில்னே (ரன் இல்லை) ஆகியோரை வீழ்த்தினார். இதனால் நிலைமை இன்னும் மோசமானது. 44-வது ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது நியூஸிலாந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.