புரோ கபடி: பாட்னா "ஹாட்ரிக்' சாம்பியன்
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது.


5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. பாட்னா தனது இறுதிச் சுற்றில் 55-38 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் முதல் ரைடு சென்ற, குஜராத் வீரர் சுகேஷ் ஹெக்டே வெறுங்கையோடு திரும்பினார்.
அதைத் தொடர்ந்து ரைடு வந்த பாட்னா வீரர் மானு கோயத் இரு புள்ளிகளைக் கைப்பற்றினார். அதற்குப் பதிலடியாக அடுத்த ரைடில் குஜராத் வீரர் ராகேஷ் நர்வால் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளை தட்டிச் சென்றார். இதனால் 5-ஆவது நிமிடத்தில் பாட்னா அணியில் 2 வீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
அப்போது ரைடு சென்ற குஜராத்தின் சுகேஷ் ஹெக்டே, அவர்களை வீழ்த்த, பாட்னா ஆல்அவுட்டானது. இதனால் குஜராத் 9-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு பாட்னாவின் பின்கள வீரர்கள் அபாரமாக ஆட, அந்த அணி மெதுவாக சரிவிலிருந்து மீண்டது. மானு கோயத் ரைடு மூலம் ஓரிரு புள்ளிகளைப் பெற்றுத்தர, 15-ஆவது நிமிடத்தில் 14-10 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது பாட்னா.
16-ஆவது நிமிடத்தில் குஜராத் வீரர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்தது. அப்போது ரைடு சென்ற பாட்னா கேப்டன் பிரதீப் நர்வால், சூப்பர் ரைடு மூலம் குஜராத் வீரர்கள் மூவரையும் வீழ்த்தினார். இதனால் ஸ்கோர் சமநிலையை (15-15) எட்டியது.
இதன்பிறகு மானு கோயத் இரு புள்ளிகளை தட்டி வர, பாட்னாவின் ஆதிக்கம் ஆரம்பமானது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பாட்னா 21-18 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் பாட்னாவின் ஆதிக்கமே தொடர்ந்தது. பிரதீப் நர்வால் தொடர்ச்சியாக புள்ளிகளைக் கைப்பற்ற, 25-ஆவது நிமிடத்தில் 2-ஆவது முறையாக ஆல் அவுட்டானது குஜராத். இதனால் பாட்னா27-21 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு பிரதீப் நர்வாலும், மானு கோயத்தும் தங்களுடைய ரைடின் மூலம் குஜராத் வீரர்களை திணறடித்தனர். 32-ஆவது நிமிடத்தில் குஜராத் வீரர்களின் எண்ணிக்கை 3-ஆக குறைய, அப்போது ரைடு சென்ற பிரதீப் நர்வால் மிக நிதானமாக ஆடி, சூப்பர் ரைடு மூலம் அந்த மூவரையும் வீழ்த்தினார். இதனால் குஜராத் அணி மூன்றாவது முறையாக ஆல் அவுட்டானது. அப்போது பாட்னா 38-26 என்ற வலுவான முன்னிலையை எட்டியது.
பிரதீப் நர்வால் சூப்பர்-10 அந்தஸ்தை (ஓர் ஆட்டத்தில் ரைடின் மூலம் 10 புள்ளிகளைக் கைப்பற்றுவது) பெற்றார். அவரைத் தொடர்ந்து பாட்னா பின்கள வீரர் ஜெய்தீப் ஹை-5 அந்தஸ்தை (டேக்கிள் மூலம் 5 புள்ளிகள் பெறுவது) பெற்றார்.
இதன்பிறகு குஜராத் வீரர்கள் மஹேந்திர ராஜ்புட், சந்திரன் ரஞ்சித் ஆகியோர் தங்களின் அபார ரைடால் முறையே 2 மற்றும் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, 36-ஆவது நிமிடத்தில் ஆல் அவுட்டாகும் நிலைக்கு தள்ளப்பட்டது பாட்னா. தனியொருவராக களத்தில் நின்ற பிரதீப் நர்வால், மூன்றாவது முறையாக சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளை தட்டிவர, பாட்னா ஆல் அவுட்டாவதிலிருந்து தப்பியது.
இதன்பிறகு பிரதீப் நர்வால் அடுத்தடுத்து புள்ளிகளைக் கைப்பற்ற, 39-ஆவது நிமிடத்தில் பாட்னா 50-36 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து குஜராத் 4-ஆவது முறையாக ஆல் அவுட்டானது. இறுதியில் பாட்னா 55-38 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது.
பாட்னா தரப்பில் பிரதீர் நர்வால் 19 புள்ளிகளையும், மானு கோயத் 9 புள்ளிகளையும், விஜய் 7 புள்ளிகளையும் கைப்பற்றினர். குஜராத் தரப்பில் சச்சின் 11 புள்ளிகளை பெற்றார்.
சூப்பர் ரைடில் ஹாட்ரிக்!
இந்த ஆட்டத்தில் பாட்னா கேப்டன் பிரதீப் நர்வால் மூன்று முறை சூப்பர் ரைடு மூலம் புள்ளிகளைக் கைப்பற்றினார். அவருடைய முதல் இரண்டு சூப்பர் ரைடுகளில் குஜராத் அணி ஆல்அவுட்டானது. மூன்றாவது சூப்பர் ரைடில் தனது அணியை ஆல்அவுட்டாவதிலிருந்து காப்பாற்றினார் பிரதீப் நர்வால்.
ரூ.3 கோடி பரிசு!
சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா அணிக்கு ரூ.3 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ.1.8 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த பின்கள வீரர் சுரேந்தர்!
இந்த சீசனின் சிறந்த பின்கள வீரராக ஹரியாணா ஸ்டீலர்ஸ் வீரர் சுரேந்தர் நாடா தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் 21 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் டேக்கிள் மூலம் 80 புள்ளிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ரைடர்!
இந்த சீசனில் பாட்னா கேப்டன் பிரதீப் நர்வால் 26 ஆட்டங்களில் விளையாடி ரைடின் மூலம் மொத்தம் 369 புள்ளிகளைக் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் அதிக புள்ளிகளைக் கைப்பற்றிய ரைடர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுதவிர 19 முறை சூப்பர்-10 அந்தஸ்தையும், 18 முறை சூப்பர் ரைடு அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். இதன்மூலம் இந்த சீசனின் சிறந்த ரைடருக்கான விருது, மதிப்புமிக்க வீரருக்கான விருது ஆகிய இரண்டையும் அவர் தட்டிச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...