ரோஹித், கோலி அதிரடி சதம்: இந்தியா 337 ரன்கள் குவிப்பு

3-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி...
ரோஹித், கோலி அதிரடி சதம்: இந்தியா 337 ரன்கள் குவிப்பு

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டு, தொடரை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போட்டியிட உள்ளன.

இந்தத் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், அது இந்தியா தொடர்ச்சியாக வென்ற 7-ஆவது ஒருநாள் தொடராக இருக்கும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர் ஷிகர் தவன் 14 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் 2-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஜோடி அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டது. இருவரும் சதம் விளாசினர். ரோஹித் ஷர்மா 138 பந்துகளில் 18 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 147 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி 106 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 113 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த தோனி 25 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் கான்பூர் மைதானத்தில் நடந்த 15 போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது.

அதுபோல ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டைச் சதம் குவித்த ஜோடிகளாக விராட் கோலி, ரோஹித் ஷர்மா புதிய சாதனைப் படைத்தனர். இந்த ஜோடி ஒருநாள் போட்டிகளில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடத்தைப் பிடித்தது.

சச்சின், கங்குலி ஜோடி 3 முறை 200 ரன்களுக்கு மேலும், கம்பீர், கோலி ஜோடி 3 முறை 200 ரன்களுக்கு மேலும், தரங்கா, ஜெயவர்தனே ஜோடி 3 முறை 200 ரன்களுக்கு மேலும் குவித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சேன்ட்னர், ஆடம் மில்னே, டிம் சௌதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com