ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோனி சொதப்புகிறாரா?

ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோனி சொதப்புகிறாரா?

முக்கியமான கட்டங்களில் தோனியின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது?...

இதுவரை எந்தவொரு வீரரும் ஏழு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை. அந்த பெருமை தோனிக்கு மட்டுமே உரியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 முறையும் புணே அணிக்காக ஒருமுறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார் தோனி. 

எனினும் அத்தகைய முக்கியமான கட்டங்களில் தோனியின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது? தோனி போன்ற ஒரு முக்கியமான வீரரால் எந்தளவுக்கு இறுதிப்போட்டிகளில் அணிக்கு உதவ முடிந்துள்ளது? இதற்கான பதிலைத் தேடிச் சென்றால் மிகப்பெரிய உற்சாகம் உண்டாவதில்லை. ஏழு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தோனி தேர்வானாலும் ஒருமுறை கூட அவர் ஆட்ட நாயகன் பட்டத்தையோ தொடர் நாயகன் பட்டத்தையோ பெற்றதில்லை. அதேபோல அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்ததில்லை. 

தோனி விளையாடிய ஏழு இறுதிப் போட்டிகளில் இருமுறை மட்டுமே அவர் சார்ந்த அணி சாம்பியன் ஆகியுள்ளது. சென்னை நான்கு முறையும் புணே ஒருமுறையும் இறுதிக்கட்டத்தில் தோல்வியடைந்துள்ளன.

ஒருவேளை இறுதிப்போட்டிகளில் தோனி அதிக ரன்கள் எடுக்காதது தான் அவருடைய அணிகளின் தோல்விகளுக்கு முக்கிய காரணமா? 

ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோனி

2008: 29*
2010: 22
2011: 22
2012: 14*
2013: 63*
2015: 18
2017: 10

இதில் 2010,20111 ஆகிய ஆண்டுகளில் தோனி தலைமையேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. இதைப் பார்க்கும்போது மிகவும் மோசமாகவும் விளையாடாமல் அதேசமயம் நிறைய ரன்களும் எடுக்காமல் இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் தோனி என்பது தெரியவருகிறது. சிலசமயங்களில் அவர் கடைசிப் பகுதியில் ஆட வருவதால் அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போன நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 

2008: 13-வது ஓவரில் களமிறங்கிய தோனி 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2010: சிஎஸ்கே முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 12-வது ஓவரில் களமிறங்கிய தோனி, 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2011: 15-வது ஓவரில் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய தோனி, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2012: 18-வது ஓவரில் களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
2013: 149 ரன்கள் என்கிற இலக்கை எடுக்கமுடியாமல் சென்னை தடுமாறிய ஆட்டம் இது. எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை நின்ற தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
2015: இதுவும் ஒரு மோசமான தோல்வி. 203 ரன்கள் என்கிற இலக்கை எட்டமுடியாமல் 41 ரன்களில் தோற்றது சென்னை. 12-வது ஓவரில் களமிறங்கிய தோனி, 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2017: ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி போன்ற ஒரு நட்சத்திர வீரரிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். 2011 உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் தோனியின் ஆட்டத்தை மறக்கமுடியுமா? அப்படியொரு தருணம் இதுவரை ஐபிஎல்-லில் தோனிக்கு வாய்க்கவில்லை. இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னொருமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றால் தோனியின் மீதுதான் அத்தனை கண்களும் இருக்கும். தன் மீதான எதிர்பார்ப்பை இந்தமுறையாவது தோனி பூர்த்தி செய்ய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com