ஹார்மோன்பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டி சந்த் நீண்ட நீதிமன்ற போராட்டத்துக்கு பின் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்கிறார்.
கடந்த 2014 ஆசியப் போட்டியில் ஆடவர் ஹார்மோன் இருந்த பிரச்னையால் டுட்டி சந்த் வெளி யேற்றப்பட்டார்.
இதே பிரச்னைக்காக தான் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரட்டை ஒலிம்பிக் சாம்பியன் கேஸ்டர் செமன்யாவுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் செமன்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடகளத்தில் தனது இடத்தை மீண்டும் உறுதி செய்தார்.
இந்நிலையில் 22 வயதான டுட்டி சந்த் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்பது உறுதி ஆகியுள்ளது.
100 மீ ஓட்டப்பந்தயத்தில் இடம் பெற்று நாட்டுக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பில் உள்ள சந்த் கூறியதாவது-
ஏற்கெனவே தவற விட்ட வாய்ப்பை மீண்டும் பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. எனது கடினமான உழைப்புக்கு பலன் கிட்டியுள்ளது. விளையாட்டில் இருந்தே விடைபெற என்றும் நினைத்ததில்லை. நாட்டுக்காக ஓட வேண்டும் என்பதே எனது இலக்காகும். என்ன நடந்ததோ அது எனது தவறில்லை.
எனது குடும்பத்தில் 6 சகோதரிகள். வறுமை காரணமாக தான் விளையாட்டை தேர்வு செய்தேன். டெஸ்டோஸ்டெர்டோன் பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் எந்த மருத்தையும் உள்கொள்ளவில்லை. எல்லாமே இயற்கையானது தான் இயற்கையாக உருவாகும் ஹார்மோன்களை குறைக்கவோ கூட்டவோ முடியாது என்றார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த டுட்டி சந்த் 100 மீ ஓட்டத்தில் பிரகாசமான வீராங்கனையாக உருவெடுத்தார். ஆனால் கடந்த 2014 ஆசியப் போட்டியின் போது அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட டெஸ்டோஸ்டெர்டோன் இருந்ததால் ஆண் தன்மை இருப்பதாகக் கூறி போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஹைப்பரேண்ட்ரோஜெனிஸம் எனப்படும் இந்த பிரச்னை டுட்டி சந்தை கடுமையாக அலைகழித்தது. அப்போதிருந்த விதிமுறைகளை காண்பித்து சந்த் ஆசியப் போட்டியில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் தடை விதித்தது.
எனினும் சந்த் மனம் தளராமல் விûளாட்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் வழக்கு தொடர்ந்தார். அவரது முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சந்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
இதனால் தற்போது ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 100, 200 மீ ஓட்டங்களில் பங்கேற்பார். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டரில் சந்த் 11.29 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
அவரது பயிற்சியாளர் ரமேஷ் கூறுகையில்: நீண்ட நாள்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து மீண்டும் பார்முக்கு திரும்புவது மிகவும் கடினம். ஆனால் சந்த் அதை முறியடித்து போட்டியில் சவாலை ஏற்றுள்ளார். இப்பிரச்னையால் அவருக்கு ஏற்பட்ட மனக்காயத்தை ஆற்ற முயற்சிக்கிறேன். தேசிய சாதனை நேரத்தை விட குறைவாக ஓடி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு என்றார்.