காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

70 ஆண்டுகள் காத்திருப்பு தொடரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா

News image
Updated On :4 டிசம்பர் 2018, 7:44 pm

சுஜித்குமார்

* நாளை முதல் டெஸ்ட் தொடக்கம்
* 70 ஆண்டுகள் காத்திருப்பு


70 ஆண்டுகள் காத்திருப்பு தொடரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
4 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நவம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 1-1 என சமன் செய்தது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 6-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலெய்டில் தொடங்குகிறது. 
முதல் வெற்றி பெறுமா இந்தியா?
70 ஆண்டுகளில் ஆஸி. மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒன்றில் கூட இந்தியா இதுவரை வெல்லவில்லை.
1947-48-இல் ஆஸி. 4-0, 
1969-70-இல் ஆஸி. 4-0, 
1977-78-இல் ஆஸி. 3-2, 
1980-81-இல் 1-1 டிரா, 
1985-86-இல் 0-0, டிரா, 
1991-92-இல் ஆஸி.4-0 என தொடரை கைப்பற்றியது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை
பின்னர் இந்திய-ஆஸி டெஸ்ட் தொடர் பார்டர்-கவாஸ்கர் கோப்பை என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதில் 1999-2000 தொடரில் ஆஸி. 3-0, 2003-04-இல் 1-1 என டிரா, 2007-08-இல் ஆஸி. 2-1, 2011-12-இல் ஆஸி. 4-0, 2014-15-இல் ஆஸி. 2-0 என சொந்த மண்ணில் தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஆனால் ஆஸி. மண்ணில் ஒரு தொடரைக் கூட இந்தியா வெல்லவில்லை.
உள்ளூரில் புலி (லோக்கல் டைகர்) எனப்படும் இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களில் பெரிய வெற்றிகளை குவிக்காத நிலை தொடருகிறது. நிகழாண்டில் தென்னாப்பிரிக்கா,. இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை இழந்து விட்டது.
ஆஸி.க்கு எதிராக 2003-04-ல் கங்குலி தலைமையிலான அணி அந்நாட்டிலேயே 1-1 என டிரா செய்ததே சிறப்பானதாக உள்ளது. 2000-ஆம் ஆண்டில் இருந்து 17 ஆட்டங்களில் விளையாடியதில் 2-இல் மட்டுமே இந்தியா வென்றது. 10-இல் ஆஸி. வென்றது. 

ஸ்மித்-வார்னர் இல்லாமையால் சாதகம்?
தற்போதைய ஆஸி. அணி அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் இல்லாமையால் வலுகுன்றிய நிலையில் உள்ளது. உப்புகாகிதத்தால் பந்தை சேதப்படுத்திய புகாரால் மூவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இந்தியாவுடன் நடைபெறும் தொடரில் பங்கேற்க முடியாது.
இதனால் ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை முதன்முறையாக வெல்ல நல்ல வாய்ப்பு என பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர். விராட் கோலி தலைமையில் சிறந்த பேட்ஸ்மேன்கள், நம்பிக்கை தரும் வேகப்பந்து வீச்சாளர்கள், எதிரணியை நிலைகுலையச் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்கள், என இந்தியா புதிய பலத்துடன் காணப்படுகிறது.
இறுதியா இலங்கை மற்றும் மே.இ.தீவுகளுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ஒரு டெஸ்டில் வென்றது. ஆஸி. மண்ணில் அந்த அணியை எந்த ஆசிய அணியும் எதிர்கொண்டு தொடரை முழுமையாக வென்றதில்லை. தற்போது அந்த வாய்ப்பு கோலி அணிக்கு கிடைத்துள்ளது.

பிரித்வி ஷா வெளியேற்றம் பின்னடைவு
இளம் வீரர் பிரித்வி ஷா சிறந்த டெஸ்ட் ஒபனராக உருவெடுத்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்து முதல் டெஸ்டில் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேஎல் ராகுலுடன், முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்கக் கூடும். மிடில் ஆர்டரில் ரஹானே, கோலி, புஜாரா, ஆகியோர் தங்கள் பங்கை சரிவர நிறைவேற்றினால், பெரிய ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. பெளலிங்கில் புவனேஸ்வர் குமார், பும்ரா, சமி ஆகியோர் வலுவான அணியாக உள்ளனர்.
பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து செயல்பட்டால். ஆஸி. பேட்டிங்கை நிலைகுலையச் செய்யலாம்.
ஆஸி. பேட்டிங்கில் தடுமாற்றம்
சுழற்பந்து வீச்சை எளிதாக ஆடும் ஸ்மித், வார்னர் இல்லாதது, ஏனைய வீரர்களை எளிதில் சுழற்பந்து வீச்சு மூலம் ஆட்டமிழக்கச் செய்யலாம். ஆஸி.அணியில் பேட்டிங் தடுமாற்றத்துடன் இருந்தாலும், ஆரோன் பின்ச், உஸ்மான் கவஜா, டிராவிஸ் ஹெட், ஷேன் மார்ஷ், பார்மில் உள்ளனர். பெளலிங் வழக்கம் போல் மிச்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோருடன் வேகப்பந்துவீச்சில் வலுவாகவே உள்ளது. நாதன் லியான் சுழற்பந்தில் கவனம் செலுத்துவார். உள்ளூரில் ஆடுவது அதற்கு சாதகமான அம்சம் ஆகும். 
4 ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றுமா இந்தியா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டெஸ்ட் ஆட்டங்கள் விவரம்...
முதல் டெஸ்ட், அடிலெய்ட், டிச. 6 முதல் 10. வரை. (அதிகாலை 5.30, இந்திய நேரப்படி)
இரண்டாவது டெஸ்ட், பெர்த், டிச. 14 முதல் 18 வரை. காலை 7.50.
மூன்றாவது டெஸ்ட், மெல்போர்ன், டிச. 26 முதல் 30 வரை. (அதிகாலை 5.00)
நான்காவது டெஸ்ட், சிட்னி, ஜன.03 முதல் 07 வரை. (அதிகாலை 5.00).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.