முடிவைத் தீர்மானிக்கும் 5-ஆம் நாள்! பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்

5-ஆம் நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா வெற்றிபெற 219 ரன்கள் தேவைப்படுகிறது. அதுபோல இந்திய அணி வெற்றிபெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 
முடிவைத் தீர்மானிக்கும் 5-ஆம் நாள்! பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்
Updated on
1 min read

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேதேஸ்வர் புஜாரா அபாரமாக ஆடி 123 ரன்கள் எடுத்தார். ஆஸி. தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

15 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா 71 ரன்களும், ரஹானே 70 ரன்களும் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய நாதன் லயன் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார், ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இந்நிலையில், 323 ரன்கள் வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்துள்ளது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிரணிக்கு கடும் சவால்களை அளித்து வருகிறது. மேலும் இரு அணி வீரர்களும் களத்தில் விறுவிறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இன்னும் 5-ஆம் நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா வெற்றிபெற 219 ரன்கள் தேவைப்படுகிறது. அதுபோல இந்திய அணி வெற்றிபெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 

அதேபோன்று இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இடையில் அவ்வப்போது மழையும் குறுக்கிட்டு வருவதால், இப்போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கடைசி நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com