

விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தால் தடை நீக்கம் செய்யப்பட்ட 15 ரஷிய தடகள வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கு பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) கூறியது.
ரஷியா விவகாரம் தொடர்பான விவகாரங்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஒருமனதாக அளித்த பரிந்துரையின் பேரில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக ஐஓசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
2014 சோச்சி ஒலிம்பிக்கின்போது ரஷிய அரசு அமைப்புகளின் ஆதரவுடன் அந்நாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2016 ரியோ ஒலிம்பிக்கில் ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கிலும் அந்நாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும், தனிநபர் பிரிவு விளையாட்டுகளில் பங்கேற்கும் 169 ரஷிய வீரர், வீராங்கனைகள் மட்டும் கடும் பரிசோதனைகளுக்குப் பிறகு பொதுவான வீரர்களாக பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊக்கமருந்து குற்றச்சாட்டில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தவர்களில் 28 பேர் மீதான தடையை விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, அதில் 15 பேர் பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அறிப்பட்ட நிலையில், ஐஓசி இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.