திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய இளைஞர் பட்டாளம்

கடந்த 1975-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2018, 8:36 pm

க.தி.மணிகண்டன்

கடந்த 1975-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல நாடுகள் பங்கேற்கும் 19 வயதுக்கு (யு-19) உள்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, சில காரணங்களால் அப்போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 1998-ஆம் ஆண்டு யு-19 உலகக் கோப்பை மீண்டும் தொடங்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் இந்த உலகக் கோப்பைப் போட்டி, இந்த ஆண்டு நியூஸிலாந்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
பி-பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாபுவா நியூ கினியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏ பிரிவில் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, கென்யா அணிகளும், சி பிரிவில், வங்கதேசம், நமீபியா, கனடா, இங்கிலாந்து அணிகளும், டி பிரிவில், பாகிஸ்தான், இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஜனவரி 13-ஆம் தேதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது. குரூப் பி-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஜனவரி 14-ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் குறித்து ஒரு சிறிய உலா வருவோம்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியை முதன்முறையாக கடந்த 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா நடத்தியது. அந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வரை சென்ற ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து 1998-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியை நடத்தியது. அந்த ஆண்டு கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது. பின்னர், 2002, 2010 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மீண்டும் 2 முறை கோப்பையைக் கைப்பற்றியது. 2004, 2006 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை பாகிஸ்தான் அணி வாகை சூடியது.
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் முதன்முறையாக தென் ஆப்பிரிக்க அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதேபோல், கடந்த 2016-இல் முதல்முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இளம் வீரர்களை அடையாளம் காட்டும் போட்டி: பல இளம் வீரர்களை அடையாளம் காட்டும் இந்தப் போட்டியின் மூலம்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், சுழற்பந்தில் பல சாதனைகளைப் புரிந்த ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா, புஜாரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்தியா கைப்பற்றியது. அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் வேறு யாருமல்ல; இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான். இப்படி பல சிறப்பான வீரர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் யு-19 உலகக் கோப்பை, இந்த முறையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.
இந்த ஆண்டு யு-19 உலகக் கோப்பை போட்டியை நியூஸிலாந்து நடத்துகிறது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை 18 வயது பிருத்வி ஷா ஏற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், தாணேவைச் சேர்ந்த இவர், இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறினால் மிகையல்ல. இந்த அணியில் இடம்பெற்றிருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுபமன் கில்லும் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். மிகச் சிறப்பான வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
நியூஸிலாந்தில் 8 ஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த ஆடுகளங்களில் விளையாடுவது நமது இளைஞர்களுக்கு மிகக் கடுமையான சவாலாக இருக்கும் என்று டிராவிட் கணித்துள்ளார். ஏனென்றால் அந்த நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலை முற்றிலும் வேறாக இருக்கும்.
மூன்று முறை கோப்பை வென்றுள்ள இந்தியா: கடந்த 2000-ஆவது ஆண்டில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய யு-19 அணி உலகக் கோப்பையை முதல் முறையாக ருசித்தது. அதைத்தொடர்ந்து, கேப்டன் கோலி தலைமையிலான அணி 2008-ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றிக் கோப்பையை முத்தமிட்டது.
அதன் பிறகு, 2012-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.
இந்தியாவின் முதன்மை கிரிக்கெட் அணிக்காக எதிர்வரும் காலங்களிலும் விளையாடப்போகும் இளம் பட்டாளம், நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி தாய்நாட்டுக்கு உலக அரங்கில் பெருமை சேர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.