பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

33% வருமானத்தைக் கொடு: மாநில அரசின் உத்தரவுக்கு விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!

ஹரியானா விளையாட்டு வீரர்கள் அம்மாநில அரசுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார்கள்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:15 pm

எழில்

சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வென்ற 66 பதக்கங்களில் அதிக பதக்கம் வாங்கிய மாநிலம் என்கிற பெருமையை ஹரியானா பெற்றது. 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என அந்த மாநிலம் 22 பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது. இந்தியா சர்பாக கலந்துகொண்ட 218 வீரர்களில் 38 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். தங்கம் வென்ற ஹரியானா வீரர்களுக்கு ரூ. 1.50 கோடியும் வெள்ளிக்கு ரூ. 75 லட்சமும் வெண்கலத்துக்கு ரூ. 50 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்தது. இதுதவிர காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் குரூப் ஏ அரசுப் பதவிகள் வழங்கப்படும். மற்ற பதக்கங்கள் பெற்ற ஹரியானா வீரர்களுக்கு குரூப் பி, குரூப் சி அரசுப் பணிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. 

ஹரியானாவில் உள்ள 22 மாவட்டங்களிலும் 10 விளையாட்டுகளுக்கான 440 விளையாட்டு மையங்களை கடந்த ஒரு வருடத்தில் திறந்துள்ளது அம்மாநில அரசு. மேலும் 15 விளையாட்டுக்களுக்கான 680 மையங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடகள வீரர்களுக்கான சிந்தடிக் தடகள டிராக்குகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுபோல தங்கள் மாநிலம் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும், சர்வதேச அரங்கில் பதக்கங்களைக் குவிக்க வேண்டுமென்று மிகவும் மெனக்கெடுகிறது ஹரியானா அரசு. ஊக்கத் தொகையையும் அரசு வேலைகளையும் வாரி வழங்குகிறது. அதனால் விளையாட்டில் நாட்டிலேயே நெ.1 மாநிலமாக உயர்ந்துள்ளது. 

இதையெல்லாம், மற்ற மாநில விளையாட்டு வீரர்கள் ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்த நிலையில், அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஹரியானா விளையாட்டு வீரர்கள் அம்மாநில அரசுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார்கள்.

தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை (33%) ஹரியானா விளையாட்டு கவுன்சிலுக்கு வழங்கவேண்டும் என்றொரு உத்தரவு பிறப்பித்துள்ளது ஹரியானா அரசு. மாநிலத்தின் விளையாட்டு வளர்ச்சிக்கும் திறமைகளைக் கண்டெடுக்கவும் அந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. இதுதான் ஹரியானா வீரர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. 

Story image

இந்த உத்தரவு விளையாட்டு வீரர்களைக் கேலிக்குள்ளாக்குகிறது. இதர விளையாட்டு வீரர்களை விடவும் அதிகமாகச் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த உத்தரவு கிடையாது. விளம்பரங்கள் மூலமாக கிரிக்கெட் வீரர்கள் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். ஆனால் குத்துச்சண்டை, கபடி, மல்யுத்த போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களுக்கு விளம்பரங்கள் வழியாக அந்தளவுக்கு வருமானம் கிடைப்பது கிடையாது. எங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மாநில அரசுக்கு கொடுத்துவிட்டால் எங்களுக்குச் சிரமம் ஏற்படும். மீதமுள்ள பணம் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார் மல்யுத்த வீராங்கனை கீதா போகத். 

நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அரசுக்குத் தெரியுமா, தெரியாதா? எங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எப்படிக் கேட்கலாம்? பரிசுத்தொகைக்கு நாங்கள் வருமான வரி கட்டுகிறோம் என்பது மாநில அரசுக்குத் தெரியாதா? இதுகுறித்து அரசு எங்களிடம் விவாதித்திருக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தினால் குறைவான பதக்கங்களே கிடைக்கும் என்கிறார் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத். யோகேஸ்வர் தத் கூறியதாவது: எங்களை அரசு அதிகாரிகளிடமிருந்து கடவுள்தான் காப்பாற்றவேண்டும். ஹரியானாவின் விளையாட்டு வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்களிப்பு ஒன்றும் கிடையாது. இந்த உத்தரவால் பலர் வேறு மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார்கள். இதற்கு அரசு அதிகாரிகள்தாம் காரணம் என்றார். 

வீரர்களின் மனக்குமுறல் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் கெம்கா கூறியதாவது: அரசுப் பணியில் உள்ள வீரர்கள் மட்டுமே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.