திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

துப்பாக்கி சுடுதலில் துளிர்க்கும் நம்பிக்கை நட்சத்திரம் 

உலக அரங்கில் தாய்நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் 16 வயது இளம்பெண் மானு பேக்கர். ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டத்தின் கோரியா என்ற கிராமத்தில் பிறந்த மானு பேக்கரின் தந்தை ராம்கிஷண்

News image
Updated On :10 மார்ச் 2018, 5:53 am

க.தி.மணிகண்டன்

உலக அரங்கில் தாய்நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் 16 வயது இளம்பெண் மானு பேக்கர். ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டத்தின் கோரியா என்ற கிராமத்தில் பிறந்த மானு பேக்கரின் தந்தை ராம்கிஷண் பேக்கர் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். தாயார் சுமிதா, மகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
மானு சிறுவயதில் இருந்தே அனைத்து விளையாட்டுகள் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். நடனத்திலும் சிறந்து விளங்கிய அவர், முதலில் குத்துச்சண்டையிலும், டென்னிஸ் போட்டியிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். குத்துச்சண்டை போட்டி ஒன்றில் கண்ணில் காயம் ஏற்பட, பெற்றோர் அறிவுறுத்தியதால் அந்த விளையாட்டை கைவிட்டார்.
பின்னர், காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் வீராங்கனையாக மாறிய மானு, மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் ஆனார். இடையே, மணிப்பூரில் பிரபல தற்காப்பு கலையான 'தாங் தா'வையும் கற்றுத் தேர்ந்தார். ஏனோ, அவை அனைத்தையும் 2015-ஆம் ஆண்டுடன் மூட்டைக்கட்டி ஓரமாக வைத்துவிட்டார்.
அதன்பிறகு அவர் தேர்வு செய்த விளையாட்டுத் துறைதான் துப்பாக்கி சுடுதல். அந்தத் துறையில் சாதிப்பேன் என்று தந்தையிடம் உறுதி அளித்தார்.
தனது கிராமத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் சேர்ந்து துப்பாக்கியைப் பிடித்து பயின்றார். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான இளையோர் பிரிவில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், 21 வயதுக்கு உள்பட்டோருக்கான ஜூனியர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதைத் தொடர்ந்து ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்களை அள்ளிய மானு பேக்கரின் குறி, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மட்டுமல்ல; இலட்சியத்திலும் தப்பவில்லை.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பரில் 61-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில், உலகக் கோப்பையில் பலமுறை பதக்கங்களை வென்ற சீனியர் வீராங்கனை ஹீனா சித்துவின் சாதனையை முறியடித்து ஆச்சரியமளித்தார் மானு. 2017-இல் நடைபெற்ற ஆசியான் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தற்போது, மெக்ஸிகோவில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பிலான உலகக் கோப்பை போட்டியில், தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார். அதே போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சக நாட்டவரான ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் இணைந்து இரண்டாவது முறையாக மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒட்டுமொத்தமாக இந்தியா பெற்ற 4-ஆவது தங்கம் இதுவாகும்.
மானு பேக்கர் தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தொடர்ச்சியாக 2 தங்கப் பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். மேலும், இந்தியாவிலேயே மிக இளம் வயதில் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் தங்கம் வென்றவர் மற்றும் சர்வதேச அளவில் இளம் வயதிலேயே உலகக் கோப்பையில் தங்கம் வென்ற 3-ஆவது நபர் என்ற சாதனையையும் மானு படைத்துள்ளார்.
இந்நிலையில், அதே போட்டியில் இன்று (மார்ச் 10) நடைபெறவுள்ள 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கும் மானு பேக்கர், தாம் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே மூன்று தங்கம் வென்றவராக முத்திரை பதிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பும்.
இந்தியாவில் அடையாளம் காணப்படாமல் எத்தனையோ வீரர்களும், வீராங்கனைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால் தேசத்தைப் பெருமை கொள்ளச் செய்வார்கள் என்பது நிதர்சனம்.
பதினாறு வயதினிலே இத்தகைய சாதனைகளைப் படைத்து வரும் மானு பேக்கர், இந்திய துப்பாக்கி சுடுதலில் துளிர்க்கும் ஓர் நம்பிக்கை நட்சத்திரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.