இந்திய பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டிக்காக திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகள் பிவி.சிந்து, கரோலினா மரின், சாய்னா நெவால், பிரணாய் ஆகியோரை அதிகபட்சமாக ரூ.80 லட்சத்துக்கு வெவ்வேறு அணிகள் வாங்கின.
ஐபிஎல், ஐஎஸ்எல், பிகேஎல் போன்று பாட்மிண்டன் விளையாட்டையும் பிரபலப்படுத்த பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சீசன் 4-ஆம் போட்டிகள் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி மும்பையில் தொடங்கி, 2019 ஜனவரி 13-இல் பெங்களூரில் இறுதிச் சுற்றோடு முடிவடைகிறது.
ஏற்கெனவே 8 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது 9-ஆவது அணியாக புணே செவன் ஏசெஸ் அணி சேர்க்கப்பட்டுள்ளது. இது நடிகை டாப்ஸிக்கு சொந்தமான அணியாகும். இந்நிலையில் வீரர், வீராங்கனைகளுக்கான ஏலம் புது தில்லியில் நடைபெற்றது.
பி.வி.சிந்து, உலக சாம்பியன் கரோலினா மரின் ஆகியோரை ஏலம் எடுக்க அதிக கவனம் செலுத்தினர்.
கடந்த முறை ஹைதராபாத் அணியில்விளையாடிய கரோலினாவை, புணேவும், சென்னை அணியில் விளையாடிய சிந்துவை தற்போது ஹைதாரபாத் அணியும், சாய்னா நெவாலை நார்த் ஈஸ்டன் வாரியர்ஸும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையான ரூ.80 லட்சத்துக்கு ஏலம் எடுத்தன.
ஆடவர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் விக்டர் ஆக்ஸ்லெசன் ஆமாதபாத் அணியிலும், ஸ்ரீகாந்த் பெங்களூரு அணியிலும், பிரணாய் தில்லி அணியிலும் விளையாட உள்ளனர். பிரணாயை ரூ.80 லட்சத்துக்கு தில்லி அணி வாங்கியது. சென்னை அணியில் கொரிய வீரர் சுங் ஜி யுன் ரூ.54 லட்சத்துக்கு பெறப்பட்டார். இரட்டையர் பிரிவில் கிறிஸ், கேபி அட்காக் ரூ.36 லட்சத்துக்கு வாங்கப்பட்டனர்.
4-ஆவது சீசன் பிபிஎல் போட்டிக்காக மொத்த பட்ஜெட் ரூ.60 கோடி ஆகும். இதில் ரூ.6 கோடி பரிசுத் தொகை என அமைப்பாளர் அதுல் பாண்டே தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










